குடியிருப்பு குடிநீர் திட்டத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு 6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்

* நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிக்க ‘எப்எஸ்ஐ’ உயர்த்த அரசு முடிவு

* மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை நிலம், வளர்ச்சி பெருவழியாக மேம்படுத்தப்படும்

* ஒற்றை சாளர முறையில் திட்ட அனுமதி இந்தாண்டில் செயல்படுத்தப்படும்

மாநிலத்தின் அனைத்து மக்களுக்கும் போதுமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதற்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தற்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 542 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ரூ.2,208 கோடி மொத்த மதிப்பீட்டில் 5.64 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 6 புதிய கூட்டு குடிநீர் திட்டங்கள் வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும். குடியிருப்புக்கு குடிநீர் திட்டத்திற்காக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் பழுதடைந்த, பழைய குடியிருப்பு பகுதிகளின் மறுமேம்பாடு மேற்கொள்ளப்படும். இதற்காக, அரசு ஒரு ‘மறுமேம்பாட்டுக் கொள்கையை’ இந்த ஆண்டு வெளியிடும். இதுவரை 60 திட்டங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டு, தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் அதிகபட்ச தளப்பரப்பை அடைவதற்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை 62 கிலோ மீட்டர் நீளமுள்ள வெளிவட்டச் சாலையின் கிழக்கு பகுதியில் 50 மீட்டர் அகலமுள்ள நிலம், வளர்ச்சிப் பெருவழியாக மேம்படுத்தப்படும். இந்த பெருவழியை அடுத்துள்ள பகுதிகளில், குடியிருப்பு நகரியம், சிப்காட் தொழிற்பூங்காக்கள், பொழுதுபோக்கு பகுதிகள், சேமிப்புக் கிடங்குகள், தோட்டக்கலை பூங்காக்கள், இயற்கை உணவு பதப்படுத்தும் மண்டலம் மற்றும் தயார் நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் ஆகியவற்றை அமைத்திட திட்டமிடுவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பெருவழியில் முழுமையான வளர்ச்சியை அடைய, தளப்பரப்பு குறியீடும் உயர்த்தப்படும்.

திட்ட அனுமதி, கட்டிடம் கட்டுதல், மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும். பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (நகர்ப்புறம்) ரூ.3,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கு ரூ.8,737.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: