முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க கண்காணிப்பு பணி தீவிரம்-வனத்துறை அதிகாரிகள் தகவல்

ஊட்டி :  முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமல் தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊட்டி அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் புலிகள் மட்டுமின்றி காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடி, காட்டு எருமைகள், பல்வேறு வகையான மான்கள், முதலைகள், பல்வேறு வகையான பறவைகள், மான்கள் உட்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

இது தவிர விலை உயர்ந்த தேக்கு மற்றும் ஈட்டி மரங்கள் அதிகளவு உள்ளன. ஆண்டு தோறும் நவம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி மாதம் வரை நீலகிரியில் பனி பொழிவு அதிகமாக காணப்படும். இச்சமயங்களில், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் மற்றும் சிறிய மரங்கள் காய்ந்து போய்விடுகின்றன. அதே போல் நவம்பர் மாதம் முதல் மே மாதம் வரை இப்பகுதியில் மழையும் குறைந்து  காணப்படும் நிலையில், இங்குள்ள நீரோடைகள், குளங்கள் மற்றும் குட்டைகள் காய்ந்து விடுவது வழக்கம். இதனால், இங்கு வாழும் விலங்குகள் நீரின்றி, நீர் நிலைகளை நோக்கி இடம் பெயருவது வழக்கமாக உள்ளது.

இம்முறையும் வழக்கம் போல் அதிக பனி பொழிவாலும், மழை பொய்த்த காரணத்தினாலும், தற்போது முதுமலை முழுவதும் மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது.

இதனால், பெரும்பாலான வன விலங்குகள் தற்போது முதுமலையை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர துவங்கி விட்டன. மேலும், புலிகள் காப்பகம் காய்ந்து போய் உள்ள நிலையில், தற்போது காட்டு தீ ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், காட்டு தீ ஏற்படாமல் இருக்க தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் கூறியதாவது: இந்தாண்டு முதுமலை புலிகள் காப்பகத்தில் தீ பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக கருத்தப்படுகிறது. இதனால் தீ தடுப்பு நடவடிக்கைகளில் காப்பக நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்தாண்டு பருவ மழை காரணமாக காப்பகத்தில் தாவரங்களின் வளர்ச்சி அபரீதமாக உள்ளதால், பனியால் அவை கருகி தீப்பிடிப்பு அபாயம் அதிகரித்துள்ளது. முதுமலை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67ன் இரு புறங்களிலும் தீ தடுப்பு கோடுகள் வெட்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

காப்பகத்தின் வெளிவட்ட பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. காட்டு தீ ஏற்பட்டால் பரவாமல் இருக்க 6 மீட்டர் அகலத்துக்கு சாலையின் இரு புறங்களிலும் காய்ந்த தாவரங்களுக்கு வன ஊழியர்கள் தீ வைத்து சாம்பலாக்கியுள்ளனர். இதனால், சாலையோரங்களில் தீ ஏற்பட வாய்ப்பில்லை.

காட்டு தீ பெரும்பாலும் செயற்கையாகவே ஏற்படுகிறது. இதனால் காப்பகத்தினுள் செல்லும் சாலைகளை வனத்துறையினர் கண்காணிப்பார்கள். குறிப்பாக, கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். தீ தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதுமலை வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 67ன் இரு புறமும் 15 கிலோமீட்டர் தூரத்துக்கு, 6 மீட்டர் அகலத்துக்கு தீ தடுப்பு கோடுகளை வெட்டப்பட்டு வருகின்றன. காட்டு தீ ஏற்படால் தடுக்க தீ தடுப்பு காவலர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வனத்தீ குறித்து வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க நிறுவப்பட்ட காமிராக்கள் வனத்தீ தடுக்க பயன்படுத்தப்படும். என்றனர்.

Related Stories: