நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவு பரபரப்பு பயங்கர ஆயுதங்களுடன் கொலை திட்டம் தென்மாவட்ட ரவுடிகள் 5 பேருக்கு வலை: சிக்கிய கார் டிரைவரிடம் விசாரணை

சென்னை: நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவு வாகன சோதனையின்போது, பயங்கர ஆயுதங்களுடன் காரில் வந்த தென் மாவட்ட ரவுடிகள் 5 பேர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். காரில் வந்த டிரைவரை போலீசார் பிடித்து, இவர்கள் யாரை கொலை செய்ய வந்தார்கள் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம் காவல் நிலைய எஸ்ஐ மருது தலைமையிலான போலீசார், நுங்கம்பாக்கம் மேயர் சிவசண்முகம் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த காரை, போலீசார் மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால், போலீசார் வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு கார் வேகமாக செல்ல முயன்றது. போலீசார் சுதாரித்துக்கொண்டு அந்த காரை சுற்றி வளைத்தனர்.

அப்போது காரில் இருந்து 5 பேர், மின்னல் வேகத்தில் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் துரத்தியும் பிடிக்க முடியவில்லை. காரை ஓட்டி வந்த நபர் மட்டும் பிடிபட்டார். அந்த காரை சோதனை செய்தபோது, அதில் 5க்கும் மேற்பட்ட வீச்சரிவாள்கள் இருந்தன. உடனே போலீசார் கார் மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வமணி என்பதும், தப்பி ஓடிய நபர்கள் தென் மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கணேசன் என்றும், அவருடன் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்கில் தொடர்புடைய ரவுடிகளான உதய பாண்டி, பரமசிவம் உட்பட 5 பேர் என தெரியவந்தது.

ரவுடி கணேசன் மீது நாங்குநேரி காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கார் டிரைவர் செல்வமணியை கைது செய்த போலீசார், தப்பி ஒடிய ரவுடி கணேசன், உதயபாண்டி, பரமசிவம் உட்பட 5 பேர், யாரை கொலை செய்யும் நோக்கில் ஆயுதங்களுடன் சென்னை வந்தனர். தொழிலதிபர்களை யாரேனும் மிரட்டி பணம் பறிக்கும் நோக்குடன் சென்னை வந்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை துப்பாக்கி முனையில் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வாகன சோதனையின் போது பயங்கர ஆயுதங்களுடன் தென் மாவட்ட ரவுடிகள் தப்பி சென்ற சம்பவம் நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: