எனக்கு ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்கவில்லை உங்களின் கனவுகளை நிறைவேற்ற என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளுங்கள்: கலெக்டர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னையில், மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 10ம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள், காவல் துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாட்டின் இறுதி நாளான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை ஆற்றினார். அப்போது, அவர் பேசியதாவது: மக்கள் நம்மை நம்பி ஆட்சி பொறுப்பை ஒப்படைச்சிருக்காங்க. மக்கள் நம்மை நம்பி அதிகாரத்தையும் ஒப்படைச்சிருக்காங்க. மக்கள் நம்மை நம்பி தான் கோட்டையை ஒப்படைச்சிருக்காங்க. கடைக்கோடி மனிதனோட கவலையையும் தீர்க்குற அரசா ஒரு அரசு அமையணும், அப்படித்தான் இந்த அரசு அமைஞ்சிருக்கு. அத்தகைய அரசுக்கு உறுதுணையாய் இருக்கக்கூடிய  மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட வன அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய  நன்றி.

நில அபகரிப்புகள், ஆக்கிரமிப்புகள் குறித்து சென்னை மாவட்ட கலெக்டர்  உள்பட பலரும் பேசினார்கள். நீர் நிலைகளில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவது குறித்து இங்கு பெரிய விவாதமே நடந்தது. நீர் இருந்தாலும், இல்லை என்றாலும் அது நீர் நிலைதான். எனவே, அது ஆக்கிரமிப்பு என்பதில் நீதிமன்றம் உறுதியாக இருக்கிறது. நீர்நிலைகளை பராமரிக்காத காரணத்தால் வெள்ளக் காலங்களில் நாம் அடையும் பாதிப்புகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம். எனவே, நீர்நிலை ஆக்கிரமிப்பு என்பதை நாம் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும்.

சிறு, குறு நிறுவனங்களை புதிதாக உருவாக்குவதில் உள்ள சிக்கல்களை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் கூறினார். சிறு, குறு நிறுவனங்களை அதிகமாக உருவாக்குறதுல அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும், அதுதான் சாமானியர்களுக்கு வேலைவாய்ப்பை தரும் துறை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பருவ மழையினால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய அரசின் சார்பில் தரப்பட்ட தொகை குறைவாக இருக்கிறது என்று நீர்வளத்துறை செயலாளர் சொன்னார். நிச்சயமாக அதுவும் பரிசீலிக்கப்பட்டு தேவைப்படக்கூடிய நிதியை வழங்குவோம். அரசு துறைகள் முழுமையாக கணினிமயமாக்கப்பட வேண்டும். அனைத்து மின்னணு சேவை மையங்களும் ஆய்வு செய்யப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் மேம்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் சீர்திருத்தப்பட வேண்டும். சென்னை போன்ற மாநகரங்களில் தேவைக்கேற்ப கட்டமைப்புகள் விரிவுபடுத்தப்படும். கல்வியும் - சுகாதாரமும் இந்த அரசின் இரு கண்கள். சாலை வசதி, மின்சாரம், உணவு பொருள் வழங்கல் ஆகியவை அடுத்த இலக்கு. இவற்றில் எந்த தடங்கலும் இருக்கக் கூடாது. அனைவரும் dashboard உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். நாள்தோறும் அதை நான் பார்க்கிறேன். நீங்களும் உங்களது dashboardல் உங்களது பணிகளை செதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

எனக்கு நீங்கள் ஒத்துழைப்பு தாங்கள் நான் கேட்கவில்லை, உங்களோட கனவுகளை நிறைவேற்ற என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அரசியல் என்ற சொல்லில் அரசு இருக்கிறது. அரசியலும் - அரசு இயலும் இணைந்து நமக்கான வளமான தமிழ்நாட்டை அமைப்போம். இது உங்களால் மட்டும்தான் முடியும். இந்த கூட்டத்தில் திட்டமிடுதல்கள் குறித்து அதிகம் பேசினோம். அடுத்த நடக்கக்கூடிய கூட்டத்தில் சாதனைகளை பற்றி அதிகம் பேசுவோம். அந்த வகையில் அது அமைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

* உற்சாகம் தந்த 3 நாட்கள்

முன்பு இருந்ததை விட கடந்த மூன்று நாட்களில் நான் அதிகமான உற்சாகத்தோடு  இருக்கிறேன். உங்கள் ஒவ்வொருவர் பேச்சும் எனக்கு டானிக்கை, சக்தியை கொடுத்திருக்கிறது, ஒரு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது, ஊக்கத்தை கொடுத்திருக்கிறது. ஒருவரை ஒருவர் நாம் புரிந்துகொள்ள இந்த மூன்று நாள்  மாநாடு அடித்தளம் அமைத்துள்ளது. இதனை மிக சிறப்பாக ஒருங்கிணைத்த தலைமை  செயலாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பட்டிமன்றங்களின்  நடுவராக இருந்தவர் என்பதால் அனைவருக்கும் பேச அனுமதியும் கொடுத்து,  குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவும் வைத்தார் தலைமை செயலாளர் . அதேபோல்  காவல்துறை இயக்குநருக்கும் நன்றி. பங்கேற்ற துறையின் செயலாளர்கள், மாவட்ட  கலெக்டர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Related Stories: