பெரியாறு அணை பராமரிப்புக்கு அனுமதி மறுப்பு கேரள வனத்துறையை கண்டித்து குமுளி சென்ற விவசாயிகள் கைது

கூடலூர்: கேரள வனத்துறையைக் கண்டித்து, குமுளியில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற தமிழக விவசாயிகளை, லோயர்கேம்பில் போலீசார் கைது செய்தனர். பெரியாறு அணையை பராமரிக்கும் தமிழக அரசின் நீர்ப்பாசனத்துறை அலுவலர் குடியிருப்புகள் தேக்கடியில் உள்ளன. சமீபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் கூரை சேதமடைந்து, சுவரில் சிமென்ட் பூச்சு உதிர்ந்துள்ளன. இவைகளை சீரமைப்பதற்காக நேற்று முன்தினம் காலை குடிநீர் தொட்டி, பிளாஸ்டிக் பைப்கள் உள்பட தளவாடப் பொருட்களை தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இந்த வாகனத்தை தேக்கடியில் உள்ள கேரள வனத்துறை சோதனைச்சாவடியில், அம்மாநில அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த தமிழக அதிகாரிகள், இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அனுமதி மறுத்த கேரள வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த, நேற்று தமிழக ஐந்து மாவட்ட விவசாய சங்கம், முல்லைச்சாரல் விவசாய சங்கம், பாரதிய கிசான் சங்க விவசாயிகள் குமுளி நோக்கி சென்றனர். அவர்களை உத்தமபாளையம் போலீசார் லோயர்கேம்ப்பில் தடுத்து நிறுத்தினர். இதனால் விவசாயிகள், போலீசாரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கோஷமிட்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக நிர்வாகிகள் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: