தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ; 3 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 20ம் தேதி வாக்கு எண்ணிக்கை!!

சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 20ம் தேதி எண்ணப்படுகின்றன. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 2019ம் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. பாண்டவர் அணியில் நடிகர்கள் விஷால், நாசர், கார்த்திக் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த அணியை எதிர்த்து நடிகர் பாக்யராஜ் தலைமையில் ஐசிரி கணேஷ், குட்டி பத்மணி ஆகியோர் சுவாமி சங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிட்டனர். 2019 ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டாலும் நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டன.

இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தேர்தல் செல்லும் என்றும் ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணலாம் என்றும் கடந்த மாதம் 23ம் தேதி தீர்ப்பளித்தது. அதன்படி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 20ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறுகிறது. அன்றைய தினம் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அல்லது அவர்களது முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: