விரிசல் ஏற்பட்டு பலம் இழந்து காணப்படும் கங்கைகொண்டான் சிறுகுளத்தை தூர்வாரி கரையை பலப்படுத்த வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

நெல்லை :  நெல்லை அருகே கங்கைகொண்டான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அணைத்தலையூர் கிராமத்தை ஒட்டி கங்கைகொண்டான் சிறுகுளம் உள்ளது. இக்குளத்திற்கு சிற்றாறு மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இக்குளத்தின் மூலம் அணைத்தலையூர், ஆலடிப்பட்டி உள்ளிட்ட அருகிலுள்ள கிராம பகுதியில் சுமார் 1000க்கும் அதிகமான ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தற்போது இக்குளத்தின் கரைகள் சில இடங்களில் சுருங்கி உள்ளதோடு, கரையின் மீதுள்ள பாதைகள் விரிசல் விழுந்து கரை பலம் இழந்து காணப்படுகிறது. எனவே குளக்கரையை சீரமைக்க வேண்டுமென விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அணைத்தலையூரைச் சேர்ந்த விவசாயிகள் செல்வராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் கூறுகையில், கங்கைகொண்டான் சிறுகுளம் 981 ஹெக்டேர் பரப்பளவு உடையது. இக்குளத்தின் மூலம் அணைத்தலையூரைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறோம். இந்த குளம் தூர்வாரி பல வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த குளத்தின் கரையை விவசாயிகள் மட்டுமின்றி ஊர்மக்களும் பக்கத்து ஊர்களுக்கு செல்வதற்கு பிரதான பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

அணைத்தலையூரில் இருந்து கங்கைகொண்டான் சப்வே பகுதி ேநாக்கி செல்லும் குளக்கரை பகுதியில் ஏற்கெனவே தார் சாலை அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால் போக்குவரத்துக்கு சிரமமாக உள்ளது. மேலும் அணைத்தலையூரில் இருந்து ஆலடிப்பட்டி செல்லும் குளக்கரையில் மணல் சாலை உள்ளது.

அந்த சாலையும் தற்போது விரிசல் விழுந்துள்ளது. மழைக் காலங்களில் குளத்திற்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பினால் குளக்கரை பலமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே விவசாயிகளின் நலன்கருதி கங்கைகொண்டான் சிறுகுளத்தை தூர்வாருவதோடு, அதன் கரையை பலப்படுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளக்கரையின் ஓர்பகுதியில் சேதமடைந்துள்ள தார்சாலைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: