நெல் கொள்முதலுக்கு லஞ்சம் உள்ளிட்ட புகார்கள் எதிரொலி தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 313 கண்காணிப்பாளர்கள் டிரான்ஸ்பர்: அமைச்சர் சக்கரபாணி அதிரடி

சென்னை: தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. பின்னர் அந்த நெல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் அரவை ஆலைக்கு அனுப்பப்பட்டு, அரிசியாக அரைத்து பின்னர் பொது விநியோக திட்டத்துக்கு வழங்கி வருகிறது. கொள்முதல் செய்யும் இடங்களில் ஒரு நெல் மூட்டைக்கு ₹40 வரை லஞ்சமாக கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டி வந்தனர்.  

இதை தொடர்ந்து நெல் கொள்முதல் பணிகளை கண்காணிக்க, ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர்களை, கொள்முதல் அலுவலர்களாக அரசு நியமித்தது. ஆனால் இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்ததால், இந்த துறையில் காணப்படும் முறைகேடுகள் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்ததாக தலைமையிடத்துக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வரும் கண்காணிப்பாளர்கள் மற்றும் பல்வேறு புகார்களுக்கு உள்ளான கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 313 கண்காணிப்பாளர்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்துள்ளார். அதற்கான உத்தரவை நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குநர் பிரபாகர் பிறப்பித்துள்ளார்.

இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 25 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 24 பேரும், நாகை மாவட்டத்தில் 7 பேரும், சென்னை தலைமையிடத்திலிருந்து 30 பேரும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து 16 பேரும், மதுரை மாவட்டத்திலிருந்து 14 பேரும், தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து தலா 12 பேரும் என மாநிலம் முழுவதும் 313 கண்காணிப்பாளர்கள் மண்டலம் விட்டு மண்டலத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒரே நாளில் இவ்வளவு பேர் ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது நுகர்பொருள் வாணிப கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: