உக்ரைனில் இருந்து பங்களாதேஷ் நாட்டவர் 9 பேர் மீட்பு!: பிரதமர் நரேந்திர மோடிக்கு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா நன்றி..!!

பங்களாதேஷ்: உக்ரைனில் இருந்து பங்களாதேஷை சேர்ந்த 9 பேரை மீட்ட இந்தியாவுக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய ராணுவம் பல பகுதிகளை கைப்பற்றி, முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ் புறநகர் பகுதிகள், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில், குடியிருப்பு கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் அனைத்தும் குண்டுவீச்சில் தரைமட்டமாகி உள்ளன. இந்த போரால் மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால், ஒன்றிய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் மாணவர்களை மீட்டு வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இந்த மீட்பு பணியின் போது பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற அண்டை நாடுகளை சேர்ந்தவர்களையும் இந்தியா மீட்டு வருகிறது. அந்த வகையில் பங்களாதேஷை சேர்ந்த 9 பேரை உக்ரைனில் இருந்து இந்தியா மீட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கி தவித்த பங்களாதேஷ் நாட்டினரை மீட்டதற்காக, இந்திய அரசுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக உக்ரைனில் சிக்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்த ஆஸ்மா ஷபீக் என்ற பெண்ணை இந்தியா மீட்டது. தன்னை மீட்டதற்கு உக்ரைன் தலைநகர் கீவ்-வில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தான் பெண் ஷபீக் நன்றி கூறினார்.

Related Stories: