‘‘நானும் ஐஏஎஸ் அதிகாரிதான்’’ கலெக்டரிடம் சிறுவன் பேசும் வீடியோ -சமூக வலைதளங்களில் வைரல்

நாகை : ‘‘நானும் ஐஏஎஸ் அதிகாரிதான்’’ என்று கலெக்டரிடம் சிறுவன் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாகை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மகளிர் தின விளையாட்டு போட்டி கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது. இதில் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரிசையாக நின்ற போட்டியாளர்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து வந்தார்.

அப்போது போட்டியாளர்கள் நடுவில் நின்ற 4 வயது சிறுவன், கலெக்டருக்கு வணக்கம் தெரிவித்து கை கொடுத்ததோடு நானும் ஐஏஎஸ் அதிகாரிதான் என்று கூறினான். இதை கேட்டு முதலில் திகைத்த கலெக்டர் சிறுவனின் துணிச்சலை கண்டு மகிழ்ந்து அருகில் அழைத்தார். உடன் பெற்றோரும் வந்தனர். கலெக்டரிடம் பேசிய அந்த சிறுவன், எனது பெயர் கவின்மாறன் மிகிஷி, நானும் உங்களை போல ஐஏஎஸ் அதிகரியாக ஆக வேண்டும் என்றான். கலெக்டரிடம் தைரியமாக சிறுவன் பேசியதை கேட்டு அங்கிருந்தவர்கள் கைதட்டினர்.

அப்போது கலெக்டரிடம் சிறுவனின் தாயாரும், எனக்கு கலெக்டர் ஆக வேண்டும் என சிறுவயதில் ஆசை இருந்தது. ஆனால் என்னால் ஆக முடியவில்லை. இதுபற்றி எனது தாயார் அடிக்கடி கூறி வருத்தம் அடைவார். இதை கேட்டு எனது மகனும், நான் கலெக்டராகி காட்டுகிறேன் என கூறுவான். எனது பெயர் கவின் ஐஏஎஸ் என நண்பர்களிடம் அடிக்கடி கூறுவான் என தெரிவித்தார். நாகையில் 4 வயது சிறுவன், கலெக்டரிடம் தைரியமாக நானும் ஐஏஎஸ் தான் என நேரடியாக பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: