செய்யாறு அரசு கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்கள் தர்ணா போராட்டம்-கண்ணமங்கலத்தில் பஸ்கள் நிற்காததால் பள்ளி மாணவர்கள் திடீர் சாலை மறியல்

செய்யாறு : செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடப்பிரிவு தொடங்கி 3 ஆண்டுகளாகியும் ஆசிரியர்களை நியமிக்காததை கண்டித்து கல்லூரி மாணவ, மாணவிகள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு 2 மணி நேரம் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், கண்ணமங்கலம் பஸ்நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல்  செல்வதை கண்டித்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில்  ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுமார் 7500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். முதுகலை வரை உள்ள இக்கல்லூரியில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அரசியல் அறிவியல்(பொலிட்டிக்கல் சயின்ஸ்) பிரிவு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தப் பாடப்பிரிவில் 3ம் ஆண்டு, 2ம் ஆண்டு பாடப் பிரிவில் தலா 50 மாணவர்களும் முதலாம் ஆண்டில் 70 மாணவர்கள் என 170 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஆனால், இந்த பாடப்பிரிவுக்கு இதுவரையில் பேராசிரியர்கள் நியமிக்கவில்லையாம். வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் இந்த பிரிவு பாடம் நடத்துவதால் முழுமையாக கல்லூரி நாட்களில் படிக்க இயலாமல் வீட்டிற்கு திரும்பி செல்லும் நிலை ஏற்படுகிறது.இதுகுறித்து பலமுறை பேராசிரியரிடம், கல்லூரி முதல்வரிடம் கோரிக்கை வைத்தும் இதற்கென்று ஆசிரியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே அரசியல் அறிவியல் பிரிவிற்கு பேராசிரியர்களை உடனடியாக நியமித்து உயர் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி எதிரில் ஆற்காடு சாலையில் நேற்று காலை 9.40 மணி அளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த பேராசிரியர்கள் கண்ணன், நாஞ்சில், செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் கைவிட்டு கலைந்து செல்லுமாறு கூறினர்.

ஆனாலும், கல்லூரி முதல்வர் வந்து உரிய பதில் அளிக்காத வரை கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி கல்லூரி வாயில் முன்பாக மாணவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் காலை 11மணி அளவில் வந்த கல்லூரி முதல்வர் கலைவாணி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு தினங்களில் உங்கள் பாடப் பிரிவிற்கு உரிய ஆசிரியர் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

அதன்பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர். கண்ணமங்கலம்: வேலூர்- திருவண்ணாமலை சாலையில், கண்ணமங்கலம்- சந்தவாசல் இடையே  உள்ள பெரிய அய்யம்பாளையம் ஏரிக்கரை அருகே காந்தி நகர் உள்ளது. இங்குள்ள பஸ்  நிறுத்தத்தில் இந்திரா நகர், சின்ன அய்யம்பாளையம், சோமந்தாங்கல், பாளைய  ஏகாம்பரநல்லூர், காந்தி நகர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான  மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்கின்றனர்.

இந்த பஸ் நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்பதில்லை எனவும்,  போளூரிலிருந்து கண்ணமங்கலம் செல்லும் டவுன் பஸ் மட்டும்  நின்று செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த பஸ் போளூரில் இருந்து வரும் போதே  நிரம்பி வருவதால் மாணவ, மாணவிகள் பஸ்சில் ஏற முடியாமல் அவதிக்கு  ஆளாகிறார்கள். நேற்றும் அதுபோல பஸ்சில் ஏற முயன்ற போது ஒரு மாணவன்  தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவ,  மாணவிகளும், பொதுமக்களும் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்  விஜயகுமார், ஆரணி தாசில்தார் பெருமாள், போளூர் அரசு போக்குவரத்து பணிமனை  மேலாளர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை  நடத்தினர். அப்போது எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தால் மட்டுமே சாலை மறியல்  கைவிடப்படும் என மாணவர்கள் கூறினர். அதை தொடர்ந்து, மேலாளர் சீனிவாசன்  அனைத்து அரசு பஸ்களும் காந்தி நகர் பஸ் நிறுத்தத்தல் நின்று செல்லும் என  எழுதி கொடுத்தார்.

இதனையடுத்து சாலை மறியலை கைவிட்டு மாணவர்களும்  பொதுமக்களும் கலைந்து சென்றனர்.இச்சம்பவத்தால் வேலூர் திருவண்ணாமலை- சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: