இன்ஸ்டாகிராம் மூலம் பார்த்து ‘கொரியன் நடனம்’ கற்க வீட்டை விட்டு வெளியேறிய பள்ளி மாணவி: செல்போன் சிக்னல் உதவியுடன் 2 மணி நேரத்தில் மீட்பு; போலீசாருக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை: இன்ஸ்டாகிராம் மூலம் கொரியன் நடனத்தை பார்த்து ஆர்வமடைந்த பள்ளி மாணவி ஒருவர், கொரியன் நடனத்தை கற்றுக்கொள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறினார். அவரை போலீசார் 2 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த 14 வயது சிறுமி. இவர் அருகில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி மாணவி நேற்று முன்தினம் காலை 7.45 மணிக்கு வீட்டில் இருந்து தனது துணிமணிகளை எடுத்து கொண்டு திடீரென மாயமானார். அவரது அறையில் இருந்து துணிகள் சிதறி கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், மகளின் செல்போனுக்கு போன் செய்துள்ளனர்.

அப்போது சிறுமி நான் கொரியன் நடனத்தை கற்றுக்கொள்ள வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. உடனே போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் மடிப்பாக்கம் எஸ்ஐ நிர்மல் மற்றும் காவலர் கார்த்திக் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மாயமான சிறுமியின் புகைப்படம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

மேலும், சிறுமி பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் சிறுமி இருக்கும் இடத்தை தனிப்படை போலீசார் தேடினர். அப்போது, சிறுமி சைதாப்பேட்டை சின்னமலை பகுதியில் இருப்பதாக சிக்னல் காட்டியது. உடனே தனிப்படை போலீசார் சிறுமியின் புகைப்படத்துடன் சின்னமலை பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது சிறுமி கொரியா செல்ல பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அந்த சிறுமியை போலீசார் மீட்டனர். புகார் அளித்த 2 மணி நேரத்தில் சிறுமியை மீட்ட தனிப்படையினருக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உயர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

பின்னர் சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியது குறித்து போலீசார் கூறியதாவது: கொரோனா காலத்தில் பள்ளி ஆன்லைன் வகுப்புக்காக அவரது பெற்றோர் தனியாக செல்போன் ஒன்று வாங்கி கொடுத்துள்ளனர். தினமும் ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகு, தனது நண்பர்கள் மூலம் இன்ஸ்டாகிரம் பக்கத்தில் தனது பெயரில் புதிய கணக்கு தொடங்கி உள்ளார். வழக்கமாக சிறுமிக்கு நடனத்தில் ஆர்வம் அதிகம். இதனால் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கொரியன் நடனத்தை’ பார்த்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் கொரியன் நடனத்துக்கு அடிமையான சிறுமி, தனது பெற்றோரிடம் கொரியன் நடனத்தை கற்றுக்கொள்ள வேண்டும், நடன பள்ளியில் சேர்த்துவிடும் படி கூறியுள்ளார். அதற்கு அவரது பெற்றொர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் கொரியன் நடனத்தின் மீதுள்ள ஆசையால், அந்த நடனத்தை கற்றுக்கொள்ள நேற்று முன்தினம் காலையில் வீட்டில் இருந்து துணிகளை எடுத்து ஒரு பையில் வைத்து கொண்டு சிறுமி கிளம்பிவிட்டார். கொரியா வெளிநாடு என்பதை அறியாமல் சென்னை சின்னமலையில் துணிமணிகளுடன் சுற்றித்திரிந்த சிறுமியை அவரது பெற்றோர் அரவணைத்து சென்றனர்.

Related Stories: