முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு: விசிக துணை மேயர், நகர்மன்ற தலைவர்கள் வாழ்த்து பெற்றனர்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்தார். அப்போது, விசிக துணை மேயர், நகர்மன்ற தலைவர்கள் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். அப்போது, விசிக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், ராணிப்பேட்டை நகர்மன்ற துணை தலைவர் ரமேஷ் கர்ணா, திண்டிவனம் நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமி ஆகியோர் முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்.பின்னர், திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேயர், துணை மேயர், தலைவர், துணை தலைவர் தேர்வில் சில இடங்களில் குளறுபடிகள் நடந்தது. குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக போட்டி வேட்பாளர்கள் களத்தில் இறங்கினர். அதனை முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்றோம். இதில், அவர் கவனம் செலுத்தி எங்கெங்கு அவ்வாறு நடந்ததோ அங்கெல்லாம் சீர் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். அதையும் மீறி சில இடங்களில் குழப்பங்கள் நடந்தது.

இதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்கள் உடனே பதவி விலக வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார். முதல்வரின் அறிக்கை மிகுந்த உணர்ச்சிகரமாகவும், முதிர்ச்சி நிறைந்ததாகவும், தலைமை பண்பை மிக உயர்ந்த இடத்தில் வைக்கக்கூடிய வகையில் அமைந்தது.கூட்டணி நலன்களை கருத்தில் கொண்டு அறத்தை பாதுகாக்கும் முயற்சியில் முதல்வர் இறங்கியுள்ளார். இதனால், அவர் மீதான நன்மதிப்பு உயர்ந்துள்ளது. பொதுவாக உள்ளாட்சி தேர்தல் கட்சிக்கு அப்பாற்பட்டு நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான மேயர், தலைவர் ஆகிய பதவிகளுக்கான தேர்தலை மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். பெரும்பாலான இடங்களில் எங்களுக்கு சாதகமாக உடன் நின்று திமுக மாவட்ட நிர்வாகிகள், மேலிட பொறுப்பாளர்கள் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கினார்கள். இந்த கூட்டணி மக்களிடத்தில் நன்மதிப்பை  பெற்றுள்ளது. இவ்வாறு கூறினார்.

Related Stories: