சசிகலா, டிடிவி தினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து பொதுக்குழுதான் முடிவெடுக்க முடியும்: மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு

தூத்துக்குடி: சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அதிமுகவில் இணைப்பது குறித்து பொதுக்குழுதான் முடிவெடுக்க முடியும்; மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுவதால் கட்சியில் விரிசல் தான் அதிகரிக்கும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமமுகவை அதிமுகவில் இணைப்பது குறித்து பொதுக்குழு கூடிதான் முடிவெடுக்க முடியுமே தவிர பொதுவெளியில் எதையும் கூறமுடியாது என்று கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் அதிமுகவின் எந்தவொரு முடிவையும் பொதுகுழு கூட்டித்தான் முடிவெடுப்பார்கள் என்று கடம்பூர் ராஜு சுட்டிக்காட்டியுள்ளார். தேனி மாவட்டத்தில் ஒருசில நிர்வாகிகள் சசிகலா, டிடிவி தினகரனை, அதிமுகவில் சேர்க்கும் தீர்மானத்தை நிறைவேற்றி ஒருங்கிணைப்பாளரிடம் கொடுத்துள்ளதை சுட்டிக்காட்டிய கடம்பூர் ராஜு, ஆனால் இதுவரை ஒருங்கிணைப்பாளர் இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதனிடையே தேனி - அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சுயபரிசோதனையின் தொடக்கம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமக்கும், அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார். அடுத்த கட்சியின் உள்விவகாரத்தில் எட்டி பார்த்து கருத்து சொல்ல தாம் விரும்பவில்லை என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுகவை அதிமுகவுடன் இணைப்பதற்கு அமமுக நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்துள்ளார்களா? என்ற கேள்விக்கு, யூகங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் அதிமுக, அமமுக இணைப்பில் பாஜகவின் பின்னணி குறித்த கேள்விக்கும் அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Related Stories: