திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு லிங்கோத்பவருக்கு நள்ளிரவில் சிறப்பு பூஜை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு லிங்கோத்பவருக்கு நள்ளிரவில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைக்க முக்தித்தரும் திருத்தலமாகவும் அமைந்துள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலுடன் நேரடி தொடர்புடையது லிங்கோத்பவர் வழிபாடு. அண்ணாமலையார் திருக்கோயில் சுவாமி சன்னதியின் மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவர் திருமூர்த்தம், ஆன்மிக உட்பொருள் நிறைந்த கலைநயத்துடன் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இறைவன் திருமேனியான அண்ணாமலையும், அதன் மீது காட்சி தரும் தீபமும் இந்த திருமூர்த்தத்தில் காட்சித் தருகிறது.

மேலும், உமையாளுடன் கூடிய இடபாகத்துடன் சிவபெருமான் காட்சியளிக்கிறார். இது போன்ற தனிச்சிறப்பு மிக்க லிங்கோத்பவரை வேறெந்த திருத்தலத்திலும் தரிசிக்க இயலாது. மகா சிவராத்திரி நள்ளிரவு 12 மணியளவில், லிங் கோத்பவருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை, அபிஷேகம் மிகவும் விசேஷமானது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே லிங்கோத்பவர் வழிபாட்டில் தாழம்பூ பயன்படுத்தப்படுவது வழக்கம். சிவாலய வழிபாட்டில் வேறெந்த நாட்களிலும் தாழம்பூ பயன்படுத்தப்படுவதில்லை. கோயிலில் 2ம் பிரகாரத்தில் நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

Related Stories: