×

புல்புல்

நன்றி குங்குமம் தோழி

''பெண்கள் ஏன் மெட்டி அணிகிறார்கள்?’’ என்று ஐந்து வயது குழந்தையான புல்புல் தன் அத்தையிடம் கேள்வி கேட்கிறாள். அதற்கு ‘‘நம் கால் விரலில் ஒரு நரம்பு இருக்கும். அதை மெட்டி போட்டு அழுத்தாமல் விட்டால், பெண்கள் பறந்து போய்விடுவார்கள்’’ என்று அத்தை பதில் அளிப்பார். ‘‘பறவையைப் போலவா?’’ என்று பதிலுக்கு புல்புல் கேள்வி கேட்க... ‘‘இல்லை. பெண்களை கட்டுப்படுத்தவே அணிவிக்கப்படுகிறது” என்று அத்தை சொல்கிறாள். 1881 ஆம் ஆண்டு பெங்காலில் தொடங்குகிறது கதை. மரமேறி மாங்காய் பறித்து விளையாடிக் கொண்டிருக்கிறாள் ஐந்து வயதாகும் புல்புல். அவளுக்கு பட்டுச்சேலை உடுத்தி அலங்காரம் செய்கிறார் அவளது அத்தை. புல்புல் தூங்கி விழிக்கும் போது திருமணமாகி பல்லக்கில், புகுந்த வீடு சென்றுகொண்டிருக்கிறாள். தன் தந்தை வயதை ஒத்த பணக்கார ஜமீன்தார், இந்திரனில் தாக்கூரின் மனைவியாக மாளிகையில் வசிக்கிறாள். அங்கு இந்திரனிலின் மனநலம் பாதிக்கப்பட்ட இரட்டை சகோதரன் மகேந்திராவும், அவன் மனைவி பினோதினியும் வசிக்கின்றனர். மேலும், தாக்கூரின் இளைய சகோதரனான சத்யாவும் வசிக்கிறான். புல்புல்லும் சத்யாவும் ஒரே வயதுடையனர் என்பதால் உடனே நட்பு மலர்கிறது. இருவரும் பேய் கதைகள் பேசி கண்ணாமூச்சி ஆடி ஒன்றாக வளர்கின்றனர்.

புல்புல், சத்யா மீது அதீத அன்புடன் வளர்கிறாள். இருவரும் ஒன்றாக கதை எழுதுகின்றனர். சத்யா முதல் பாதியை முடித்து, இரண்டாம் பாதியை புல்புல் எழுதி முடிக்க தருகிறான். இந்திரனில் இவர்களது அன்பைக் கண்டு பொறாமையில் சந்தேகப்பட்டு சத்யாவை வெளிநாட்டிற்கு அனுப்ப முடிவு செய்கிறான்.  புல்புல் இதை தாங்கமுடியாமல், சத்யாவை போகவேண்டாம் எனத் தடுக்கிறாள். ஆனால், சத்யா தினம் கடிதம் எழுதுவதாக சத்தியம் செய்து புறப்படுகிறான். ஐந்து ஆண்டுகள் லண்டனில் படிப்பை முடித்து, ஊருக்கு திரும்புகிறான் சத்யா. ஊரில் சில ஆண்டுகளாக நடக்கும் தொடர் கொலைகள் பற்றி அறிகிறான். மகேந்திரன் இறந்து போக, பினோதினி விதவைகளுக்கான இல்லத்தில் வசிக்கிறாள். தன் கணவனைக் கொன்றது ‘சுடேயில்’ (சூனியக்காரி) என்கிறாள் பினோதினி. இந்திரனில் ஊரைவிட்டு வெளியேறிவிட புல்புல் இப்போது மாளிகையை தனியாக ஆள்கிறாள். குறும்பு சிரிப்புடன் பேய் கதைகள் பேசி தன்னையே சுற்றி வந்த புல்புல், இப்போது ஊர் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அளவிற்கு மாறியிருப்பது சத்யாவிற்கு ஆச்சரியமாக இருக்கிறது. உடனே, புல்புல்லிடமிருந்து அனைத்து பொறுப்புகளையும் பறிக்கிறான். புல்புல் புன்சிரித்து நகர்ந்து போகிறாள்.

அடுக்கடுக்கான கொலைகளுக்கான காரணத்தை அறிய சத்யா விசாரணையில் இறங்குகிறான். இது நிச்சயம் சூனியக்காரியின் வேலை அல்ல என நம்பும் சத்யா, இக்கொலைகளைச் செய்யும் கொலைகாரனை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். இதனிடையே புல்புல்லை சந்திக்க அவ்வப்போது மாளிகைக்கு வரும் மருத்துவர் சுதீப் மீது அவனுக்கு சந்தேகம் வலுக்கிறது. புல்புல் - சுதீப் நட்பை தடை செய்யும் விதமாக, பினோதினியை அழைத்து வந்து, மாளிகையில் தங்க வைக்கிறான். கடைசியில், மகேந்திரனைக் கொன்றது யார்? இக்கொலைகளைச் செய்வது சூனியக்காரியா இல்லை கொலைகாரனா? புல்புல்லின் மாற்றத்திற்கான காரணம் என்ன? அனைத்து கேள்விகளுக்கும் சுலபமாக கணித்துவிடக்கூடிய க்ளைமேக்ஸாக இருந்தாலும், அதை கொஞ்சம் கூட த்ரில் குறையாமல் வழங்கியிருக்கிறது புல்புல்.தன் முதல் படத்திலேயே பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் அன்விதா தத். குழந்தை திருமணம், வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல், கைம்பெண்களின் வாழ்க்கை எனப் பல சமூக அவலங்களை இப்படம் அணுகியிருக்கிறது.  நாட்டுப்புற கதைகள், வாய்வழி கதைகள் என வங்காளத்தில் அமானுஷ்ய கதைகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு.

அதே பாணியில் இப்படம் நவீனக்காலத்திற்கேற்ப தயாராகியிருக்கிறது. நேர்த்தியான வசனங்களுடன் அதிக இரைச்சல் இல்லாமல், காட்சி கதைசொல்லலில் மிளிர்கிறது புல்புல். ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்‌ஷனும் திரைப்படத்தை தூக்கிப்பிடிக்கின்றன. புல்புல்லின்  தாய் வீடு, அதற்கு நேர் எதிராக ரத்த சிவப்பில் புகுந்த வீடு, சிவப்பு நிலா, 80களில் பிரிட்டிஷ் காலத்து பெங்கால் வீடுகள் என பல அழகியல் காட்சிகள் திரைப்படத்திற்கு மெருகேற்றியிருக்கின்றன. அமித் திரிவேதியின் பின்னணி படத்துக்கு கூடுதல் பலம். நடிகை திரிப்தி டிம்ரி, புல்புல் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்து, ரவிவர்மாவின் ஓவியத்தைப் போல மனதில் நிற்கிறார். மற்ற நடிகர்கள் அனைவருமே தங்கள் பாத்திரத்திற்கு சிறப்பாக உயிரூட்டியுள்ளனர். இயக்குனர் அன்விதா தத், புல்புல்-சத்யா உறவை காதல், நட்பு என்று எந்த பெயருக்குள்ளும் அடைக்காமல், அவர்களது அன்பை மட்டுமே காட்டுகிறார். தாகூர் குடும்பத்து மருமகள்களான புல்புல்-பினோதினி தோன்றும் காட்சிகள், பணக்கார குடும்பங்களில் வெளியே தெரியாமல் மறைந்திருக்கும் ரகசியங்களை கூறுகின்றன. திரையரங்கிற்கு செல்ல முடியாத இந்நேரத்தில், நெட்ஃப்லிக்ஸில் வெளியாகியிருக்கும் புல்புல், அனைவரையும் வசீகரிக்கும் திகில் திரைப்படம்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

Tags :
× RELATED மத்திய அமைச்சருக்கு நன்றி கூறி...