டிரோன் மூலம் கொசு ஒழிக்கும் பணி ஸ்மார்ட் சிட்டி ஊழலை விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம், வார்டு-173, சென்னை பசுமை வழிச்சாலையில் அமைந்துள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் டிரோன் இயந்திரங்களை கொண்டு கொசு மருந்து தெளிக்கும் பணியினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தென்சென்னை எம்பி, தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் அதிகளவு கொசுக்கள் இருப்பதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீண்டும் டிரோன் இயந்திரங்களைக் கொண்டு நீர்வழிக் கால்வாய்களில் கொசு மருந்து தெளிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் போன்ற கால்வாய்கள் மற்றும் 31 சிறிய கால்வாய்களில் இந்த டிரோன் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுமார் 113 கி.மீ. தூரத்திற்கு கொசுப்புழு கொல்லி மருந்துகள் தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. சென்னை மாநகராட்சியோடு புதிதாக இணைக்கப்பட்டுள்ள புறநகர் பகுதிகளுக்கும் சென்னையில் இருப்பது போல் நீர், பாதாள சாக்கடை, போன்ற அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். சென்னை மாநகராட்சி நிதி சுமை காரணமாக காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. முதல்வரின் அனுமதி பெற்று நிரப்பப்படும், ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் குறித்து விசாரிக்க விரைவில் குழு அமைக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

Related Stories: