ஆரோவில் 54வது உதய தினம்; வெளிநாட்டினர் ஆரோவில்வாசிகள் அதிகாலையில் கூட்டு தியானம்

புதுச்சேரி: புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் உதயமாகி 54 ஆண்டுகள் ஆவதையொட்டி இன்று அதிகாலை வெளிநாட்டினர், ஆரோவில்வாசிகள் கூட்டு தியானம் மேற்கொண்டு உற்சாகமாக கொண்டாடினர். ஸ்ரீ அரவிந்தரின் முக்கிய சீடரான அன்னை என்று அழைக்கப்படும் மீரா அல்போன்சாவின் முக்கிய கனவு நகரமான ஆரோவில் கடந்த 1968ம் ஆண்டு பிப்ரவரி 28ல் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்தில் இரும்பை, இடையன்சாவடி, பொம்மையார்பாளையம், குயிலாப்பாளையம், கோட்டக்கரை உள்ளிட்ட பகுதிகளின் மைய பகுதியில் அமைய வேண்டும் என்று முடிவு செய்தார்.

எந்த ஒரு நாட்டினரும், எந்த ஒரு மதத்தினரும் சொந்தம் கொண்டாட முடியாத வகையில் அனைவருக்கும் பொதுவான இடமாக ஆரோவில் இருக்க வேண்டும் என்று அன்னை விரும்பினார். அதன்படி ஆரோவில் அமையப்பெற்றது. இதன் முக்கிய இடமாக மாத்திர் மந்திர் அமைக்கப்பட்டது. மேலும் பாரத்நிவாஸ், அரவிந்தர் சிலை நிறுவப்பட்டுள்ள சாவித்திரி பவன் ஆகியவையும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டது. மாத்திர் மந்திர் அருகே அம்பிதியேட்டர் எனப்படும் திறந்தவெளி கலையரங்கம் உலக நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மண் மற்றும் செங்கற்கள் எடுத்துவரப்பட்டு கட்டப்பட்டது. இந்த திறந்தவெளி கலையரங்கில் இன்று ஆரோவில் 54வது உதய தினத்தையொட்டி காலை 4.30 மணியளவில் முதலே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், ஆரோவில்வாசிகள் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் என ஏராளமானோர் கூடினர்.

பின்பு சூரிய உதயத்தின்போது அப்பகுதியில் தீயைமூட்டி கூட்டு தியானம் மேற்கொண்டனர். இதையொட்டி பலவித பூக்களால் அப்பகுதியில் அலங்கரிக்கப்பட்டது.ஆரோவில்லுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் என பல்வேறு தலைவர்கள் வந்து சென்றுள்ளனர். ஆரோவில் பவுன்டேஷனுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைவராகவும், புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் நிர்வாக குழு உறுப்பினராகவும், செயலாளராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ் ஆகியோர் பொறுப்பேற்ற நிலையில் இன்று ஆரோவில் உதயதினம் கொண்டாடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

Related Stories: