ஆசிரியர், ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்

சென்னை: பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பணிக்காலம் முடிந்தபின் அவர்களது ஜீவாதாரம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக 1968 முதல் அரசால் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. மாதம் ரூ.20 என்று தொடங்கப்பட்ட ஓய்வூதியம் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு உயர்த்தி வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் பல்வேறு போராட்ட பின்னணியை தொடர்ந்து தமிழகத்தில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெற்றுவந்த 2004 முதல் நிறுத்தப்பட்டு பங்களிப்பு ஓய்வூதியம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இத்திட்டத்தின்படி இதுவரை எவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

1.4.2004 முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலே அடுத்து நிர்கதியாகி தனித்து விடப்படுகின்றனர். இந்த திட்டம் ஆசிரியர், அரசு ஊழியர் நலன் மற்றும் அரசின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாகவே உள்ளது. எனவே பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியிட்டுள்ளார். எனவே தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: