108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 108 வைணவ தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில்  ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவம் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த வகையில், இந்த ஆண்டிற்கான பிரமோற்சவம், 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளில் 21ம் தேதி சேஷவாகனம்,  சிம்மவாகனத்தில் புறப்பாடு நடந்தது. 22ம் தேதி கருட சேவை உற்சவம் நடந்தது. 23ம் தேதி சூரிய பிரபை, சந்திர பிரபை புறப்பாடு நடந்தது. 24ம் தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில், சுவாமி புறப்பாடு நடந்தது. ஆறாம் நாள் விழாவான நேற்று, காலை 5:15 மணிக்கு சூர்ணாபிஷேகம் நடந்தது. ஆனந்த விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, யானை வாகன புறப்பாடு நடந்தது.

இந்த விழாவில் முக்கிய திருவிழாவான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக, அதிகாலை 2.15 மணிக்கு திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. இதில், உற்சவர் தேவியருடன் சிறப்பு அலங்காரங்களுடன் அதிகாலையில் திருத்தேரில் எழுந்தருளினார்.  இதை தொடர்ந்து காலை 7 மணிக்கு பக்தர்கள் அமைச்சர் சேகர்பாபு, உதவி ஆணையர் கவெனிதா திருத்தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தேர் அசைந்தாடி வருவதை பார்க்கும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்த நிலையில், அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என விண்ணை பிளக்க முழக்கமிட்டனர்.

திருத்தேர் கோயிலை சுற்றியுள்ள தென்மாட வீதி, துளசிங்க பெருமாள் கோயில் தெரு, சிங்கராச்சாரி தெரு, தேரடி தெரு உள்ளிட்ட தெருக்களில் அசைந்தாடியபடி வலம் வந்தது. இதை காண பக்தர்கள் ஏராளமானோர் கூடினர். அவர்கள்  வெயிலையும் பொருட்படுத்தாமல் திருத்தேர் அசைந்து வந்ததை மாட வீதிகளிலும், மாடிகளிலும் நின்ற படி கண்டுகளித்தனர். தொடர்ந்து, சரியாக காலை 8.30 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் கோயிலுக்குள் பெருமாள் சென்றார்.

அங்கு பக்தர்களுக்கு அருள் பாலித்து விட்டு மீண்டும் வீதியுலா நடந்தது. அதன்பிறகு இரவு 8.30 மணியளவில் திருமஞ்சனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களின் வசதிக்காக குடிநீர் வசதி, கழிவறை வசதி செய்யப்பட்டிருந்தது. தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்பு பணிக்காக  நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related Stories: