சாலை மறியல் வழக்கில் மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கொலை முயற்சி வழக்கில் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை: சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதி

சென்னை: சாலை மறியலில் ஈடுபட்டதாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொலை முயற்சி வழக்கில் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடந்த பிப்ரவரி 19ம் தேதி, 49வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் அங்கிருந்த திமுக பிரமுகர் நரேஷை தாக்கி, அவரை அரை நிர்வாணப்படுத்தி அழைத்துச் சென்ற சம்பவம் தொடர்பாகவும், அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் பிப்ரவரி 21ம் தேதி கைதாகி மார்ச் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட ஜெயக்குமாரின் ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் மீதான வழக்கில் கொலை முயற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையேற்று அவரது ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவரது சார்பில் வழக்கறிஞர்கள் பாபு முருகவேல், இனியன் ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் ஜாமீன் கோரிய மனு தங்களுக்கு வரவில்லை என்று காவல்துறை சார்பில் ஆஜரான மாநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் தெரிவித்தார். அப்போது, புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஜி.ராஜேஷ் தாக்கல் செய்தார். இதையடுத்து, காவல்துறை தரப்பிற்கு மனு நகலை வழங்க ஜெயக்குமார் தரப்பிற்கும், அதற்கு பதில்தர காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், புகார்தாரர் நரேஷ் தரப்பு ஆட்சேபத்தை இடையீட்டு மனுவாக தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையில் வாக்குப்பதிவு நாளன்று காவல்துறையை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுகவினர் ராயபுரம் எம்.சி. சாலை, கல் மண்டபம் சாலை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக  ராயபுரம் காவல் நிலையத்தில் ஜெயக்குமார் உள்பட 70 பேர் மீது தொற்று நோய் பரவல் சட்டப்பிரிவு உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த வழக்கு ஜார்ஜ் டவுன் 16வது மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயக்குமார் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி வாதிட்டார். புகார்தாரர் நரேஷ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், சாலை மறியல் வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். கொலை முயற்சி வழக்கு இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

* போலீஸ் காவலில் விசாரிக்க மனு

திமுக பிரமுகரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடக்கோரி தண்டையார்பேட்டை போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: