மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 49.97 லட்சம் பேர் பயன்: மருத்துவத்துறை அறிவிப்பு

சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் நேற்று வரை 49 லட்சத்து 97 ஆயிரத்து 404 பேர் பயனடைந்துள்ளனர். மேலும் 52 லட்சத்து 22 ஆயிரத்து 664 பேர் தொடர் சேவைகளை பெற்றுள்ளனர் என்று தமிழக மருத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக சுகாதாரத்துறையின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தொடங்கி வைக்கப்பட்டு பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று 45 வயதும், அதற்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் ஏழை எளிய மக்களுக்கு பயன் உள்ளதாக அமைந்துள்ளதால் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

அதன்படி கடந்த 7 மாதங்களாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து உயர் ரத்த அழுத்த நோய் சிகிச்சைக்காக முதன் முறையாக 20,23,519 பேரும், தொடர்சேவைகள் 21,00,709 பேர், நீரிழிவு நோய் சிகிச்சை முதன்முறையாக 13,87,832 பேர், தொடர் சேவையாக 14,87,444 பேர், உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் சிகிச்சை முதன்முறையாக 10,21,924 பேர், தொடர் சிகிச்சை 1,59,848 பேர், நோய் ஆதரவு சிகிச்சை முதன்முறையாக 1,78,005 பேர், தொடர் சிகிச்சை 1,38,269 பேர், இயன்முறை சிகிச்சை முதன் முறையாக 3,43,575 பேர், தொாடர் சேவையாக 3,71,938 பேர், சிறு நீரக நோய்க்கு சுய டயாலிசிஸ் செய்து கொள்வதற்கு தேவையான பைகள் பெற்றவர்கள் முதன்முறையாக 1,259 பேர், தொடர் சேவையாக 1,244 பேர் என முதன்முறையாக 49,97,404 பேரும், தொடர் சேவையாக 52,22,664 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று தமிழக மருத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: