நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி முதல்வரின் சாதனை திட்டங்களுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்-ராஜேஸ்குமார் எம்.பி., பெருமிதம்

நாமக்கல் : நாமக்கல் நகராட்சி, மோகனூர், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, எருமப்பட்டி பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள், நேற்று மாலை நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் எம்பி, சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அதைத்தொடர்ந்து, ராஜேஸ்குமார் எம்பி தலைமையில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், மோகனூர்ரோட்டில் உள்ள திமுக தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்கு அண்ணா சிலைக்கு ராஜேஸ்குமார் எம்பி, அமைச்சர் மதிவேந்தன், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். அப்போது ராஜேஸ்குமார் எம்பி பேசியதாவது:

தமிழக முதல்வர் கடந்த 9 மாதமாக நடத்தி வரும் நல்லாட்சிக்கு, மக்கள் ஆதரவு அளித்து, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வைத்துள்ளனர். முதல்வரின் சாதனை திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மக்கள் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். திமுகவினரின் கடும் உழைப்பும் இந்த வெற்றிக்கு காரணமாகும். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களும், தலைமை அறிவித்த வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்துள்ளனர். நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள மொத்த வார்டுகளில் 95 சதவீத வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. நாமக்கல் நகரில் அமோக வெற்றி பெற்றுள்ளோம். கிழக்கு மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சி, 11 பேரூராட்சிகளையும் நாம் கைப்பற்றியுள்ளோம். இதற்காக கட்சியினருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்பி தெரிவித்தார்.

கூட்டத்தில், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் பார். இளங்கோவன், மாவட் ஊராட்சி குழுதுணைத்தலைவர் செந்தில்குமர், முன்னாள் எம்பி சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி, மாநில நிர்வாகிகள் வழக்கறிஞர் நக்கீரன், மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் பழனிவேல், நவலடி, கவுதம், அசோக்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், நகர செயலாளர்கள் பூபதி, சிவக்குமார், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சதீஸ் மற்றும் வெற்றி பெற்ற வேட்பார்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: