குழித்துறை நகராட்சி 12வது வார்டில் காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் மோதல்: காங். வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதி

மார்த்தாண்டம்: குழித்துறை நகராட்சி 12வது வார்டில்  காங்கிரஸ் ,  மார்க்சிஸ்ட் இடையே மோதல் ஏற்பட்டது. காங். வேட்பாளர் உட்பட 3 பேர் காயமடைந்தனர்.குமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி 12வது வார்டில் காங்கிரஸ்  சார்பில் லிசி ஜாய், மார்க்சிஸ்ட்  சார்பில்  ஜூலியட் மெர்லின் ரூத்,  அதிமுக  சார்பில்  எமிலி ஆகிய  3 பேர் போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் கடுமையான போட்டி நிலவுகிறது.  இந்த வார்டுக்கான பூத்   மார்த்தாண்டம்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்  அமைக்கப்பட்டு இருந்தது. வேட்பாளர்கள் நிர்வாகிகளுடன் வெட்டுவெந்நி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியையொட்டி கண்ணக்கோடு  பகுதிக்கு செல்லும் ரோட்டில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீசார் இங்கு கூடி நிற்க கூடாது என்று கூறினர்.

இந்த நிலையில் காங்கிரஸ்,  மார்க்சிஸ்ட்  நிர்வாகிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டனர். மோதலில் காங். வேட்பாளர் லிசிஜாய்,   மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர்  வக்கீல்  சுரேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேப்போல் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த  சம்பத்தும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் கண்ணக்கோடு  ரோட்டில்   கூடிநின்ற நிர்வாகிகளை லேசான தடியடி நடத்தி விரட்டினார். உடனே நிர்வாகிகள் கண்ணக்கோடு  நோக்கி ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: