கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி துணை ராணுவ படையை அழைக்கும் கோரிக்கை நிராகரிப்பு: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி துணை ராணுவ படையை அழைக்க உத்தரவிட முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஆர்.முருகேசன் மற்றும் அதிமுக வேட்பாளர் ரகுபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அமைதியான கோவை மாவட்டம் கலவர பூமியாக மாறியுள்ளது. எனவே,  ஆளுங்கட்சியின் தலையீடு இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த ஏதுவாக மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பாரா மிலிட்டரி படையை பாதுகாப்புக்காக பணியமர்த்த வேண்டும். வாக்கு பதிவு மையங்கள், வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் சாலைகள் மற்றும் முக்கியமான இடங்கலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படவேண்டும். கட்சி சார்பற்ற தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். வாக்குப் பெட்டி வாக்கு எண்ணிக்கை வரை பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் துரைசாமி, தமிழ்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கரூர் மற்றும் சென்னையில் இருந்து கோவைக்கு  ஆட்கள் வந்து உள்ளதாகவும், பாரா மிலிட்டரி போலீசார் பாதுகாப்புக்கு அமர்த்த வேண்டும் என்றும் வாதிட்டனர்.  தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார். தமிழக டிஜிபி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், 29 இடங்கள் பதற்றமான பகுதிகள் என கண்டறியப்பட்டு 1200 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

உள்துறை சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உரிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தேர்தல் தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் புதிய உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories: