திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றப்படும்-உதயநிதி ஸ்டாலின் உறுதி

கோவை :  ‘‘வெள்ளலூர் குப்பைக்கிடங்கு உடனடியாக வேறு இடத்துக்கு மாற்றப்படும்’’ என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுதி கூறினார்.

கோவை மாநகராட்சி, நகராட்சியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நேற்று கி்ணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தராபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மக்களின் வரவேற்பை பார்த்தாலே தெரிகிறது உள்ளாட்சி தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியடையும் என்பது. கடந்த முறை கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொண்டேன். மக்களின் வரவேற்பு இதைவிட அதிகமாக காணப்பட்டது. தமிழகம் முழுவதும் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை மக்கள் ஏமாற்ற மாட்டார்கள் என நம்பிக்கை உள்ளது. கோவை மாவட்டத்தில் கண்டிப்பாக திமுக வெற்றி பெறும். கொரோனா உச்சக்கட்டத்தில் இருந்தபோது திமுக ஆட்சி பொறுப்பேற்றது. திமுக ஆட்சி பொறுப்பேற்று 9 மாதங்களாகிறது.

கோவை மாவட்டத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ளார். தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை அளித்து மக்களை இரண்டு தவணை தடுப்பூசி போட விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். திமுக ஆட்சி அமைக்கும்போது அரசின் கஜானா காலியாக இருந்தது. ரூ.6 லட்சம் கோடி கடனை அதிமுக வைத்து சென்றது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். பொறுப்பேற்ற உடனே குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 தவணைகளாக ரூ. 2000 என ரூ. 4 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆவின் பால் லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழு வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கியில் உள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 13 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் நிதி நிலைமை சரி செய்த பிறகு கண்டிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்கப்படும். நான் பிரசாரம் செய்யும் கூட்டம் அனைத்திலுமே ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வந்துள்ளனர். பெண்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை திமுக முதல்வர் ஸ்டாலின் செய்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பேசும்போது தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்கும்வரை பாஜ ஒருபோதும் காலுன்ற முடியாது என பிரதமர் மோடிக்கு சவால் விட்டார். அவர் கூறியது உண்மை. தமிழகத்தில் நடக்கும் இந்த நல்லாட்சி, உள்ளாட்சியிலும் தொடர வேண்டும். அதற்கு நீங்கள், திமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.

போத்தனூர் பகுதியை ஒட்டியுள்ள வெள்ளலூர் குப்பைக்கிடங்கு உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்து தரப்படும். கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். கடந்த ஆட்சியில் மாதம் ஒரு முறை மட்டுமே விநியோகம் செய்யப்பட்ட குடிநீர், வாரம் ஒருமுறை விநியோகம் செய்யப்படும். எட்டிமடை பகுதியில் சுகாதார நிலையம் அமைக்கப்படும். செட்டிபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

மதுக்கரை நகராட்சியில் குடிநீர் இணைப்புகள் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மதிப்புக்கூட்டு தக்காளி தொழிற்சாலை அமைத்து தரப்படும். மதுக்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு ஒத்தகால் மண்டபத்தில் மின் மயானம் அமைத்து தரப்படும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார். பிரசாரத்தில், மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, இளைஞரணி மாவட்ட தலைவர் நாகராஜசோழன், கோவை மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், அ.சேதுபதி  மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ராஜவீதியில் பிரசாரம்: கோவை ராஜவீதியில் நேற்று நடந்த பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக  ஆட்சியில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி சுமார் 10 கோடி பேருக்கு  போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா மருத்துவமனைக்கு  நேரடியாக சென்று, கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து பேசிய ஒரே முதல்வர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். கொரோனா காலக்கட்டத்தில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு மளிகை தொகுப்பு வழங்கினார். கோவை மாநகராட்சியில்  பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், விரைவில் நிரந்தரமாகப்படுவார்கள்.

கோவை அவினாசி ரோடு மேம்பாலம் அடியில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி  நிற்கிறது என்று மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கை மீது  உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம்  பேர் மகளிர் போட்டியிடுகின்றனர். இந்த 50 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத்தந்தது  திமுகதான். எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, உதயநிதி ஸ்டாலின்  வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு காணாமல் போய்விட்டார் என கூறுகிறார். நான்,  தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன்.

இத்தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றிபெற செய்யுங்கள்.  விடுபட்ட திட்டங்களும் உங்கள் வீடு தேடி வரும். இவ்வாறு உயதநிதி ஸ்டாலின் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் (மாநகர் கிழக்கு),  பையா கவுண்டர் என்கிறகிருஷ்ணன் (மாநகர் மேற்கு) உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: