பயணிகளுக்கு ஏற்றவாறு செஞ்சி பஸ் நிலையத்தை அதிநவீன பஸ் நிலையமாக மாற்றி அமைப்பேன் -செஞ்சி பேரூராட்சி திமுக வேட்பாளர் கே.எஸ்.எம். மொக்தியார் அலி உறுதி

செஞ்சி : செஞ்சி பேரூராட்சி 7வது வார்டில் தி.மு.க., சார்பில் கே.எஸ்.எம்.மொக்தியார் அலி  போட்டியிடுகிறார். இவர், பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்டால் செஞ்சி பேரூராட்சியில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்து கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாசியுடன் செஞ்சி பேரூராட்சியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கி உள்ளனர். இதற்காக  முதல்வர் மு.க.ஸ்டாலின், இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், எங்களின் வழிகாட்டி உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் பேரூராட்சியில் தேர்வு செய்யப்பட்டதும் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்வதில் முதல் கவனம் செலுத்துவேன்.

பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிக்கும் குடிநீர் இணைப்புகள் விஸ்தரிக்கப்பட்டு தினமும் தடையின்றி குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுப்பேன். செஞ்சி நகரில் புதிதாக உருவாகி உள்ள குடியிருப்புகள் அனைத்திற்கும் சிமெண்ட் சாலை, கழிவு நீர் வாய்க்கால், மின் விளக்கு வசதி செய்து தரப்படும்.

செஞ்சி பஸ் நிலையம் பயணிகளுக்கு ஏற்றவாறு நவீன வசதிகளுடன் கூடிய பஸ் நிலையமாக விரிவுபடுத்துவதுடன், புதிய வணிக வளாகமும் உருவாக்கப்படும். செஞ்சி காந்தி பஜாரில் பழைய கால்வாய்களை விரிவுபடுத்தி புதுப்பித்து மழைநீர் உடனடியாக வடிய வசதி செய்யப்படும். மேல்களவாய் சாலையிலும், திண்டிவனம் சாலையிலும் உள்ள சுடுகாட்டிற்கு அருகே தண்ணீர் வசதியுடன் கருமகாரிய கூடங்கள் கட்டப்படும். மின்மயானம் அல்லது எரிவாயு தகனமேடை அமைக்கப்படும். மேல்களவாய் தரைப்பாலம் மேம்பாலமாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

நகரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். தமிழக அரசின் சுற்றுலாத்துறையுடன் இணைந்து செஞ்சி பி ஏரியை அழகுப்படுத்தி, படகு சவாரி விடவும், ஏரியின் இருபக்க கரைகளிலும் பூங்கா அமைத்து நடைபயிற்சி செய்யவும் வழிவகை செய்யப்படும். செஞ்சி கிளை நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு கணினி வசதியுடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சலவை தொழிலாளர்கள் துணி துவைக்கவும், துணி உலர வைக்கவும் டோபிகானா ஏற்படுத்தி தரப்படும். மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் விரைவாக அனைத்து வீடுகளையும் சென்றடைய நடவடிக்கை எடுப்பேன். அரசால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களையும் மக்கள் சிரமமின்றி பெறுவதற்காக இலவச இசேவை மையம் ஆண்டு முழுவதும் செயல்படும் வகையில் அமைக்கப்படும். இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது முதல் நபராக களத்தில் நின்று நிவாரணப்பணிகளை செய்வதுடன், என்னால் முடிந்த உதவிகளையும், அரசால் கிடைக்கும் உதவிகளும் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.

வழுக்காம்பாறை, நாட்டேரி, விழுப்புரம் ரோடு, ஆணைகுட்டை பகுதியில் வசிப்பவர்களுக்கு வீட்டு மணை பட்டா கிடைக்கவும், கூரை வீடுகளை அரசின் திட்டம் மூலம் படிப்படியாக காண்கிரீட் வீடுகளாக கட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும். தாய், தந்தை இல்லாத குழுந்தைகள் கல்வி பெறுவதற்கும், ஏழை விதவை தாய்மார்களின் மகள் திருமணத்திற்கும் நிதி உதவி வழங்குவேன். மேலும், ஏழை குடும்பங்களில் இறப்பு ஏற்படும்போதும் இறுதி சடங்கிற்கு நிதி உதவி வழங்குவேன். மாற்று திறனாளிகள் கல்வி பயிலவும், வேலை வாய்ப்பு பெறவும் உதவி செய்வேன்.

செஞ்சி பேரூராட்சியில் ஐந்து முறை தலைவராக பொறுப்பு வகித்த எனது தந்தை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழியில் பொதுமக்களை எந்த நேரமும் சந்தித்து மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதில் முழு கவனத்துடன் இருப்பேன். இவ்வாறு மொக்தியார் அலி தெரிவித்தார்.

Related Stories: