தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகளுக்கு வந்த எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு மலர்தூவி உற்சாக வரவேற்பு: பெற்றோர் சந்தோஷத்துடன் அழைத்து வந்தனர்; சாக்லெட் கொடுத்து அசத்திய ஆசிரியர்கள்

சென்னை:  கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் படித்து வந்த குழந்தைகள் 2 ஆண்டுக்கு பிறகு உற்சாகத்துடன் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் குறைந்துள்ளதால் பள்ளிகள்  முழு வீச்சில் தொடங்கலாம் என்று சுகாதாரத் துறை தெரிவித்த ஆலோசனையின் பேரில் தமிழக அரசு, பொது ஊரடங்கின் பல்வேறு விதிகளை தளர்த்தியுள்ளது.

அதில், மழலையர் பள்ளிகளையும்  திறக்கலாம் என்பதும் முக்கிய அறிவிப்பு. இதையடுத்து, தமிழகத்தில் தனியார் சுயநிதியில் இயங்கும்  10 ஆயிரம் நர்சரி, விளையாட்டுப் பள்ளி, கிரீச்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் ஆகியவற்றில் நடத்தப்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. பெற்றோர் மகிழ்ச்சியுடன் தங்கள் குழந்தைகளை பள்ளிகளுக்கு கொண்டு வந்து விட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மலர்கொத்து கொடுத்தும், பரிசுப் பொருட்கள் கொடுத்தும், இனிப்புகள் வழங்கியும், நுழைவாயிலில் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்வு பள்ளிகளுக்கு வரும் குழந்தைகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குழந்தைகளும் ஆர்வமுடன் பள்ளிக்குள் சென்றனர்.

மேலும், அந்த குழந்தைகளுக்கு நுழைவாயிலில்  வெப்பமானிகளை கொண்டு காய்ச்சல் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டன. தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில் குழந்தைகள் போதிய இடைவெளியில் வகுப்புகளில் உட்கார வைக்கப்பட்டனர். அரசு அங்கன்வாடி, பால்வாடி உள்ளிட்ட மழலையர்களுக்கான பள்ளிகள் மற்றும் மையங்களில் சுத்திகரிப்பு பணிகள், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மழலையர்களுக்கான பள்ளிகள் நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. சில தனியார் பள்ளிகளில் குழந்தைகளுக்கு ஆடல், பாடல் நிகழ்வுடன் உற்சாகப்படுத்தினர். குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பிறகு குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சில பள்ளிகளில் மதியம் 3 மணிவரையில் வகுப்புகள் நடத்திய பிறகு குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சுமார் ஒரு வாரத்துக்கு மழலையர்களுக்கு புத்தாக்க வகுப்புகள் நடத்தப்படும். அதற்கு பிறகு வழக்கமான வகுப்புகள் நடத்தப்படும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: