*குடிநீருக்கும், கழிப்பிடத்திற்கும் தள்ளாட்டம்
*தீர்வுகாண சாத்தியமுள்ளவர்களுக்கே வாய்ப்பு
நாமகிரிப்பேட்டை : சிறப்புகள் பொதிந்து கிடக்கும் நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில் வெற்றிவாகை சூடப்போகும் வேட்பாளர்கள் யார்? அவர்கள் தேர்வு செய்யப்போகும் தலைவர் யார்? என்பது மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பேரூராட்சிகளில் ஒன்றாக இருப்பது நாமகிரிப்பேட்டை பேரூராட்சி. இயற்கை அன்னை தனது அழகை வாரி இறைக்கும் கொல்லிமலை அடிவாரத்தில் இருக்கும் பசுமையான ஊர். நாமகிரி அம்மன் என்ற பெண் தெய்வம் கோலோச்சும் கோட்டை என்பதால் நாமகிரிப்பேட்டை என்று அழைக்கப்படுவது ஊருக்கான பெயர்க்காரணம். இசையால் இதயங்களை நாதஸ்வர வித்துவான் கிருஷ்ணன் பிறந்த ஊர். ஊரின் பெயரிலேயே இன்றளவும் அவர் அழைக்கப்படும் பெருமையும் தொடர்கிறது.
பசிரிமலை, நாமகிரிமலை, சங்கராண்டி கரடு, கலிய பெருமாள் கரடு மற்றும் இருளங்கள் கரடு போன்ற சிறு சிறு மலைகள் இப் பகுதியில் காணப்படுகின்றன. இதன் பின்னணியில் இருக்கும் தொன்மை வாய்ந்த மெட்டலா ஆஞ்சநேயர் கோயிலும் மக்களின் கவனத்தை ஈர்த்து நிற்கிறது. அப்பளம் தயாரித்து மாநிலம் முழுவதும் சப்ளை, சேகோ பேக்டரிகள், பல விளைபொருட்கள் உற்பத்தி, விவசாயம், கார்மெண்ட்ஸ், கோழிப்பண்ணைகள், மஞ்சள் ஏற்றுமதி என்று பல தொழில்களும் முத்திரை பதிக்கிறது நாமகிரிப்பேட்டை. இப்படி பல்வேறு வழிகளில் சிறப்பு பெற்ற நாமகிரிப்பேட்டை, கிராம ஊராட்சியாக இருந்து 10.8.1955ல் பேரூராட்சியாக உருவெடுத்தது. தற்போது தேர்வுநிலை பேரூராட்சி அந்தஸ்தில் உள்ளது.
17.86 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட நாமகிரிப்பேட்டையில் தற்போதைய மக்கள் தொகை 22,555. இவர்களில் ஆண்கள் 9,267 பேரும் பெண்கள் 9,740 பேரும், இதரர் 4பேரும் என்று மொத்தம் 19,011 பேர் வாக்களர்களாக உள்ளனர். இவர்களின் வாக்குகளை பெற்று வார்டு உறுப்பினர்களாகும் முனைப்போடு திமுக கூட்டணி, அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, மநீம, அமமுக, நாதக என்று அரசியல் கட்சிகள் மட்டுமன்றி சுயேட்சைகள் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்டோர் களத்தில் உள்ளனர். இவர்களில் தங்கள் பிரதிநிதிகளாக மக்கள் தேர்ந்தெடுக்கப்போகும் வேட்பாளர்கள் யார்? அவர்களால் தேர்வாகப் போகும் பேரூராட்சியின் புதிய தலைவர், துணைத்தலைவர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இது குறித்து நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பொதுமக்கள் கூறியதாவது:
இயற்கையின் சிறப்பு, வரலாற்று சிறப்பு, ஆன்மீக சிறப்பு, கலையில் சிறப்பு என்று பல்வேறு சிறப்புகளை கொண்டது நாமகிரிப்பேட்டை. அதேபோல் தொழில் வளத்திலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது. ஆனால் இந்த பேரூராட்சியின் வளர்ச்சி என்பதும், அடிப்படை கட்டமைப்புகளின் மேம்பாடு என்பதும் பல ஆண்டுகளாக கேள்விக்குறியாகவே உள்ளது. குறிப்பாக ராசிபுரத்தில் இருந்து ஆத்தூர் வழியாக சென்னைக்கு செல்லும் முக்கிய சாலையாக நாமகிரிப்பேட்டை பகுதி உள்ளது. இதனால் வாகனங்கள் தொடர்ந்து அணிவகுத்து செல்கிறது. இதனால் விபத்துகளும் தொடர்கிறது.
இதற்கு தீர்வு காணவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் ரிங்ரோடு அமைக்க வேண்டும் என்பதும் பல்லாண்டுகளாக கோரிக்கையாகவே உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் விளைபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வசதிகள் எதுவும் இல்லை. இங்குள்ள விவசாயிகள் தங்களது பொருட்களை ராசிபுரம் உழவர் சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதேபோல் மோகனூர் காவிரி குடிநீர் திட்டத்தில் பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மக்கள் தொகைக்கு ஏற்றவாறும், தேவைக்கு ஏற்றவாறும் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்படவில்லை.
இதனால் தண்ணீர் பிரச்னை என்பது பல்லாண்டுகளாக தொடர்கிறது. மேலும் பேரூராட்சி வார்டுகளில் 60சதவீதம் பொதுக்கழிப்பிட வசதி இல்லை. இதனால் திறந்த வௌியில் உடல் உபாதைகளை போக்கும் அவலமும் தொடர்கிறது. இது போன்ற பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது மிகவும் அவசியம். அதே நேரத்தில் பேரூராட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியதும் மிகவும் முக்கியம்.
தற்போதுள்ள சூழலில் யாருக்கு வாக்களித்தால் இது எல்லாம் சாத்தியம் ஆகும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று. இந்த வகையில் நம்பிக்கைக்கு உரிய வேட்பாளர்களை, எங்கள் உறுப்பினர்களாக தேர்வு செய்ய இருக்கிறோம். அவர்களில் ஒருவர் தலைவராகவும், துணைத் தலைவராகவும் இருந்து பேரூராட்சி நிர்வாகத்தை திறம்பட நடத்துவார்கள் என்று நம்புகிறோம்.
இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
