மணம் தரும்... குணமும் தரும்!

நன்றி குங்குமம் டாக்டர்

மனம் கவரும் ஊதா நிறத்தில் உள்ள ‘லாவண்டர் பூ’ நறுமணம் மிக்கது என்பதாலேயே தமிழில் ‘சுகந்தி மலர்’ என்பார்கள். உணவுகள் மற்றும் பானங்களில், இந்த மலர் நறுமணமூட்டியாகவும் சுவை கூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக மருந்து தயாரிப்புகளிலும் லாவண்டர் எண்ணெய் பயன்படுகிறது. இதன் முழுமையான பலன்கள் என்னவென்று அரோமா தெரபிஸ்ட்டான கீதா அசோக்கிடம் கேட்டோம்...

‘‘லாவண்டர் பூக்களை சோப்புகள், அழகுசாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அலங்காரங்களில் ஒரு மண மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூவின் எண்ணெயை உணவு தயாரிப்பில், ஐஸ்க்ரீம் மற்றும் தேநீருடனும் வாசனைக்காக சேர்க்கிறார்கள். மேலும் பாத்ரூமில் கிருமிநாசினியாகவும், எண்ணெய்  வடிவில் அதிக பயன்பாட்டில் உள்ள முக்கியமான ஒன்று லாவண்டர் ஆயில். பொதுவாக லாவண்டர் பூ மற்றும் எண்ணெயை மருத்துவத்தில் கவலை, அமைதியின்மை, தூக்கமின்மை, மனச்சோர்வு, தலைவலி, பல்வலி மற்றும் பிற வலிகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

லாவண்டர் எண்ணெய் மயக்க விளைவைக் கொண்டிருப்பதால்(Sedative) தசைகளின் இறுக்கத்தைக் குறைத்து தளர்வடையச் செய்கிறது. Antibacterial, Anti inflammatory மற்றும் Anti fungal விளைவுகளைக் கொண்டிருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது.
லாவண்டர் எண்ணெய் எல்லா வயதினருக்கும், அனைத்துவிதமான சரும வகைக்கும் ஏற்றது. சருமம் மற்றும் கூந்தல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும், அழற்சியால் ஏற்படும் வீக்கத்திற்கும் சிறந்த பலனைத் தருவது.

சிலர் தூக்கமின்மைப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள், இரவில் ஒரு பக்கெட் தண்ணீரில் சில துளிகள் லாவண்டர் ஆயிலை விட்டு குளித்தாலோ, காதுக்குப்பின்னால் சில துளிகள் தடவிக்கொண்டு அல்லது தலையணையில் தடவிவிட்டுத் தூங்கினால் ஆழ்ந்த நித்திரை கிடைக்கும். படிப்பதற்கு அடம்பிடிக்கும் குழந்தைகளின் அறைகளில் 100 மிலி தண்ணீரில் சில துளிகள் லாவண்டர் ஆயில் விட்டு ஸ்ப்ரே செய்தால், அந்த நறுமணத்தால் அவர்கள் அப்படியே அமைதியாகி, நல்ல கவனம் செலுத்தி படிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மன அமைதிக்கும், கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும் நல்ல பயனுள்ளது.

தீக்காயம் ஏற்படும்போது பாதிக்கப்பட்ட சருமத்தின்மேல் லாவண்டர் எண்ணெயை அப்படியே நேரடியாக தடவும்போது தீக்காயம் விரைவில் குணமடையும். வீட்டில் சமையலறை, பாத்ரூம், புத்தக ஷெல்ப்,  துணிகள் அடுக்கும் பீரோ போன்றவற்றில் லாவண்டர் எண்ணெயை தெளித்து மூடி வைத்தால் சிறு பூச்சிகள் அண்டாது. இது சிறந்த கிருமிநாசினியாக வேலை செய்கிறது. பாம்பு, பூரான், தேள் போன்ற விஷக்கடிகளுக்கு அதன்மேல் நேரடியாக 30 சொட்டுகள் லாவண்டர் ஆயிலை தடவினால் விஷம் உடலில் ஏறவிடாமல் தடுப்பதோடு, அதுபோன்ற நேரங்களில் பாதிப்படைந்தவர்களுக்கு இயல்பாக ஏற்படும் பயத்தையும் குறைத்துவிடும்.
 
கூந்தல் உடைந்து, துண்டு துண்டாக உதிர்பவர்கள் 100 மிலி விளக்கெண்ணெயில் 200 சொட்டு லாவண்டர் எண்ணெயை சேர்த்து போடும்போது, கூந்தலின் உலர்வைப்போக்கி கூந்தல் உடைவதைத் தடுக்கும். முகத்தில் பெரிய பருக்கள் வந்தவர்கள் லாவண்டர் எண்ணெயை நேரிடையாகத் தடவினால் பருக்கள் அமுங்கி, சிவப்புத்திட்டுக்களும் குறைந்துவிடும். கண்களுக்கு அருகில் கருவளையம் உள்ளவர்கள் தாமரைப்பூவை அரைத்து அதனுடன் லாவண்டர் ஆயில் துளிகளைச் சேர்த்து தடவி வந்தால் 2, 3 நாட்களிலேயே கருப்பு நிறம் குறைவதைப் பார்க்கலாம்.

லாவண்டர் எண்ணெயில் உள்ள Anti Analgesic தன்மை பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் வரும் Menstrual Cramp  எனப்படும் அடிவயிற்றுவலி, இடுப்பு வலி, கை, கால் குடைச்சல் போன்ற வலிகளைக் குறைத்துவிடும். ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய், ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன 10 முதல் 20 சொட்டு லாவண்டர் ஆயிலை கலந்து வலி உள்ள இடங்களில் தடவினால், கடுமையான வலி கூட குறைந்துவிடும். ஒருவருக்கு மன அழுத்தம், பதற்றம் இருக்கும்போது தூக்கம் வராது.

தூக்கமின்மைக்கு காரணமான மனப்பிரச்னைகளையும் போக்கும் தன்மை உடையது லாவண்டர் எண்ணெய். மன அழுத்தத்தை குறைக்க வேண்டுமானால், மனதையும், உடலையும் ஒருமைப்படுத்த வேண்டும். இந்த வேலையை லாவண்டர் ஆயில் செய்கிறது. சிலர் தேவையில்லாமல் எல்லாவற்றுக்கும் பயப்படுவார்கள். இதன் காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். அவர்களின் பயத்தையும் லாவண்டர் எண்ணெய் நறுமணம் போக்கிவிடும். எப்படி தியானம், பிரார்த்தனை இடங்களுக்கு செல்லும்போது மனம் அமைதியடைகிறதோ, அதே விளைவை இந்த எண்ணெய் ஏற்படுத்தும்.

அறுவை சிகிச்சைக்கு முன் எப்படிப்பட்ட தைரியசாலிக்கும் ஒரு மரண பயம் வந்துவிடும். அறுவைசிகிச்சை செய்யப்போகும் நோயாளியின் மனநிலையை தயார்படுத்த இதை பயன்படுத்தலாம். அந்த விதத்தில், நம் மூளையில் உள்ள மோட்டார் நரம்புகளை அமைதிப்படுத்த, கழுத்துக்கு பின்புறம் 10 சொட்டு லாவண்டர் எண்ணெயைத் தடவினால், ரத்த ஓட்டத்தில் கலந்து உடலையும், மனதையும் அமைதிப்படுத்தும். அறுவைசிகிச்சைக்குப்பின் உண்டாகும் புண்ணை ஆற்றுவதற்கு லாவண்டர் எண்ணெய் மிகவும் முக்கியம். புண்களும் மிக விரைவில் குணமாகும்.

குறிப்பாக அரோமா தெரபியில் மட்டுமே லாவண்டர் ஆயிலை பயன்படுத்துகிறோம். இதை பலவிதங்களிலும் பயன்படக் கூடிய எண்ணெய் என்று சொல்லலாம். மனம், உடல், நோய் என எல்லாவற்றுக்கும் ஒரே மருந்தாக பயன்படுகிறது. வயது, குறிப்பிட்ட நோயுள்ளவர்கள் என வேறுபாடில்லாமல் எல்லோருமே பயன்படுத்தக் கூடிய ஒன்று.தொண்டைப்புண் உள்ளவர்கள் வெந்நீரில் 10 சொட்டு கிளிசரின், 10 சொட்டு தேன், 10 சொட்டு லாவண்டர் எண்ணெய் கலந்து வாயில் விட்டு புண்ணில் படுமாறு கொப்பளித்தால் வாய்ப்புண்ணை ஆற்றிவிடும்.

தலையில் வட்ட வட்டமாக கரப்பான் வந்த இடத்தில் முடி உதிர்ந்து சொட்டையாக இருக்கும். அந்த இடத்தில் லாவண்டர் ஆயிலை தடவி வந்தால், முடி புதிதாக வளர்ந்துவிடும். மைக்ரேன் தலைவலி, மெனோபாஸ் அறிகுறி, ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் போன்ற பிரச்னைகளுக்கெல்லாம் கூட லாவண்டர் எண்ணெய் நல்ல பலன் தருகிறது.

தொகுப்பு: உஷா நாராயணன்

Tags :
× RELATED பொய் சிரிப்புக்கும் மருத்துவப் பலன் உண்டு!