கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம் சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்கு ஆண்டுக்கு 24 டிஎம்சி நீர் தர சம்மதம்

* நீர் தேக்கி வைப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த தமிழக அரசு யோசனை

* 5 ஆண்டுகளுக்குள் செயல்படுத்த நீர்வளத்துறை திட்டம்

* ஒன்றிய அரசு நிதியுதவி, உலக வங்கி நிதியை பெற நடவடிக்கை

சென்னை: கோதாவரி ஆற்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரம் டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை காவிரி ஆற்றுக்கு திருப்பிவிடும் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முன்வந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கு 300 டிஎம்சி நீர் பெறலாம் என தேசிய நீர் மேம்பாட்டு முகமை தெரிவித்துள்ளது. இதற்காக, தெலங்கானா மாநிலம் ஜனம்பேட்டில் இருந்து கோதாவரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்படுகிறது. அங்கிருந்து கால்வாய் மூலம் கிருஷ்ணா ஆறு வழியாக, பெண்ணையாறு, பாலாறு வழியாக காவிரி கட்டளை கதவணையில் இணைக்கப்படுகிறது. இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம், சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக ஆண்டுக்கு 24 டிஎம்சி நீர் தர தேசிய நீர் மேம்பாட்டு முகமை சம்மதம் தெரிவித்துள்ளது. எனவே, அதற்கேற்றாற் போல் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் நீர்வளத்துறைக்கு யோசனை தெரிவித்துள்ளது. எனவே, இந்த திட்டத்தை 5 ஆண்டுகளுக்குள் செயல்படுத்த வரைவு அறிக்கை ஒன்றை நீர்வளத்துறை தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையின்படி, பாலாற்றில் 6.8 டிஎம்சி வரை சேமித்து வைக்க கதவணை அமைக்கவும், நீர்நீலைகள் தூர்வாரி கொள்ளளவை மேம்படுத்துவதன் மூலம் 10.5 டிஎம்சியும், புதிதாக நீர்நிலைகள் அமைப்பதன் மூலம் 2 டிஎம்சி என மொத்தம் தற்போதைய சூழலில் 20.5 டிஎம்சி நீர் வரை சேமித்து வைக்க வரைவு அறிக்கை தயார் செய்துள்ளது.

இந்த வரைவு அறிக்கையை தொடர்ந்து தற்போது, இப்பணிகளுக்காக ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் மிஷன், ஏஐபிபி திட்டத்தின் கீழ் நிதியுதவி பெரும் வகையில் இந்த வரைவு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற முடியாத மற்ற திட்ட பணிகளுக்கு நபார்டு அல்லது உலக வங்கியின் நிதியுதவியின் மூலம் மற்ற பணிகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக வங்கி குழுவினர் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனாவுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். அப்போது, சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் நீர்வளத்துறைக்கு உலக வங்கியின் மூலம் ரூ.300 ேகாடியை பெறுவது குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களுக்கான நிதியுதவி பெற நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக நீர்வளத்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: