நீரவ் மோடி, விஜய் மல்லையாவை மிஞ்சும் மோசடி: 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் பெற்று மெகா மோசடி செய்தது குஜராத் நிறுவனம்...!

காந்திநகர்: இந்தியாவில் இதுவரை நடைபெற்ற வங்கிகளின் மோசடியை மிஞ்சும் வகையில் குஜராத்தை சேர்ந்த பிரபல கப்பல் கட்டுமான நிறுவனம் சுமார் 23 ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது. அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏபிஜி ஷிப்யார்டு கப்பல் கட்டுமான நிறுவனம் குஜராத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தஜெஹ் மற்றும், சூரத்தில் கட்டுமான தளங்களை கொண்டுள்ள இந்த நிறுவனம் கடந்த 16 ஆண்டுகளில் 165 கப்பல்களை கட்டி அமைத்து இந்திய அளவில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்கிறது.

இந்த நிறுவனத்தின் மீது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 2019-ம் ஆண்டு வங்கி கடன் தொடர்பாக புகார் ஒன்றை அளித்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் வங்கிகளில் இருந்து பெறப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களை வெளிநாடுகளில் உள்ள இதன் துணை நிறுவனங்களுக்கு முறைகேடாக மாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. குறிப்பாக 2012 முதல் 17 வரை சிங்கப்பூரில் உள்ள துணை நிறுவனங்களுக்கு அதிக அளவில் ரூபாய் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏபிஜி ஷிப்யார்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி, அஷ்வினி குமார் ஆகியோர் மீது பிப்.7ம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

ஐசிஐசிஐ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட 28 வங்கிகளில் 22,842 கோடி ரூபாய் கடனாக பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும், சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இதற்கு முன் நடந்த அனைத்து வங்கி கடன் மோசடிகளை காட்டிலும் இது மிகப்பெரியது. வங்கிகள் கடன் வாங்கியதற்கான நோக்கத்தை சிதைக்கும் வகையில் பல்வேறு விதமாக கடன் தொகை பயன்படுத்தப்பட்டு இருப்பதும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து சூரத், மும்பை, புனே, பாரூச் உள்ளிட்ட 13 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை செய்தது.

இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 2007ம் ஆண்டில் குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது இந்த நிறுவனத்துக்கு 1.21 லட்சம் சதுர அடி நிலம் வழங்கப்பட்டது. இந்நிறுவனம் பல்வேறு வங்கி மோசடிகளில் ஈடுபட்டு இருப்பதாக 2018ம் ஆண்டிலேயே கடும் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி முன்வைத்தது. இந்நிலையில் ஏபிஜி ஷிப்யார்டு கடன் மோசடி விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

இந்திய வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பி சென்ற விஜய் மல்லையா, நீரவ் மோடி, ஆகியோரை மிஞ்சும் வகையில் குஜராத்தை சேர்ந்த நிறுவன இயக்குனர்கள் செய்துள்ள மோசடி கண்டறியப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: