புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி-சி52 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான ஈஓஎஸ் 04-ஐ சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி- சி52 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு ராக்கெட் ஏவுவதற்கான பணிகளை இஸ்‌ரோ தீவிரமாக மேற்கொண்டு வந்தது. அந்தவகையில், புவி கண்காணிப்பு செயற்கைகோளான ஈஓஎஸ்-04 என்ற செயற்கைகோளை சுமந்துகொண்டு இந்த ஆண்டின் முதல் ராக்கெட்டான பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் பிப்ரவரி 14ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி -சி52 ராக்கெட் நாளை காலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்கிறது. ஈஓஎஸ் -04 செயற்கைகோளானது விவசாயம், வனம், மண்ணின் ஈரப்பதம் மற்றும் நீரியல் போன்றவற்றை கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்ளும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகள். இது ஒரு ரேடார் இமேஜிங் செயற்கைகோள். ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று காலை 4.29 மணிக்கு தொடங்கியது.

Related Stories: