வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு விசாரணை தேதியை மாற்ற முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

புதுடெல்லி: வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் விசாரணையை வேறு தேதிக்கு கண்டிப்பாக மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசின் சட்டத்தை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, பாமக, தலைவர் ரமதாஸ், வேல்முருகன் உள்ளிட்டோர் தாக்கல்  செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்தது. மேலும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், எழுத்துப்பூர்வ தங்கள் வாதங்களை தொகுத்து வழங்கும்படி கடந்தாண்டு டிசம்பர் 16ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி, தமிழக அரசு உட்பட அனைத்து தரப்பினரின் தரப்பில் ஒருங்கிணைந்த பதில் மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வில் வழக்கறிஞர் வருண் வைத்துள்ள கோரிக்கையில், ‘10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் எங்கள் தரப்பு எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்யவில்லை. இருப்பினும், வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்பட்டு உள்ளது,’ என தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி நாகேஸ்வர ராவ், ‘எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்வதற்கு இன்னும் 2 நாட்கள் அவகாசம் உள்ளது. அதற்குள் அதை தாக்கல் செய்யுங்கள். ஆனால், திட்டமிட்டபடி வரும் 15, 16ம் தேதிகளில் விசாரணை நடைபெறும். வேறு தேதிக்கு நிச்சயமாக மாற்ற முடியாது,’ என உத்தரவிட்டார்.

Related Stories: