மேலும் 135 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆதார் வழியில் அடையாளம் காணும் வழி நடைமுறை அமல்: போலி பத்திரப்பதிவை தடுக்க அதிரடி நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. கடந்த 2018 முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்களை படம் எடுத்தல், பயோமெட்ரிக் முறையில் கைரேகை பெறுதல் போன்றவை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நடைமுறையால் ஆள் மாறாட்டம் மூலம் பத்திரப்பதிவு செய்வதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டன. இந்நிலையில், ஆவணதாரர்களை ஆதார் வழி அடையாளம் காண புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டம் முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி 7 அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டன. தொடர்ந்து, 83 அலுவலகங்களிலும், டிசம்பர் 1ம் தேதி முதல் மேலும் 100 அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.

இந்நிலையில், வரி 8ம் தேதி முதல் நெல்லை மண்டலத்தில் 85 சார்பதிவாளர் அலுவலகங்களும், சேலம் மண்டலத்தில் 50 சார்பதிவாளர்கள் அலுவலகங்கள் என மொத்தம் 135 அனைத்து அலுவலகங்களில் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி நேற்றுமுன்தினம் முதல் இந்த அலுவலகங்களில் ஆதார் வழியில் அடையாளம் காணும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதற்காக மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களில் புதிய நடைமுறைக்காக ஒரு கணினிக்கு ஒரு விரல் ரேகை  இயந்திரமும், ஒரு அலுவலகத்திற்கு ஒரு கரு விழிப்படல கருவியும்  கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், ஒருவரின் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்யும் போது அது ஆதார் ஆணையத்தின் இணையதளத்துக்கு சென்று, ஆவணத்தை பதிவு செய்பவரின் உண்மை தன்மையை சோதிக்கிறது. மேலும், ஆதார் எண் குறிப்பிட்டவரின் கைரேகை மற்றும் கருவிழிப்படலத்தை ஸ்கேன் செய்து அதை ஒப்பீடும் செய்து பதிவு செய்யும் வகையில் மென்பொருளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்போது, ஆதார் எண்ணுக்கு உரிய நபரா என்பதை அடையாளம் காண முடியும். இதன் மூலம், போலியாக ஆள்மாறாட்டம் செய்து பத்திரம் பதிவு செய்வதை தடுக்க முடியும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: