நீட் விலக்கு மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி குடியரசு தலைவருக்கு விரைவில் அனுப்பி வைப்பார்: பேரவை செயலக உயர் அதிகாரி தகவல்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதா குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்று பேரவை செயலக உயர் அதிகாரி கூறினார்.தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதைத்தொடர்ந்து நடந்த சட்டமன்ற அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், “மீண்டும் தமிழக சட்டமன்றத்தை கூட்டி அதில் நீட் தேர்வு குறித்து கவர்னர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து, நீட் விலக்கு குறித்த சட்டமுன்வடிவை மீண்டும் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி, குடியரசு தலைவரின்ஒப்புதலை பெற ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக கவர்னருக்கு மீண்டும் அனுப்பி வைக்க வேண்டும்” என்று முடிவு எடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நேற்று முன்தினம் காலை மணிக்கு கூடியது. கூட்டம் தொடங்கியதும், நீட் விலக்கு கோரும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்து மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். தீர்மானத்துக்கு அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். பாஜ உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஆதரவாக சட்டமன்ற பேரவை உறுப்பினர்கள் அனைவரும் குரல் எழுப்பி ஆதரவு தெரிவித்ததையடுத்து, தீர்மானம் ஒருமனமதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயநகர் அப்பாவு அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட, நீட் விலக்கு மசோதா நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கிண்டியில் ஆளுநர் மாளிகையில் உள்ள கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டதாக பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு கோரும் சட்ட மசோதா தற்போது தமிழக கவர்னர் பார்வையில் உள்ளது. அவர் இதுகுறித்து சட்ட வல்லுனர்களுடன் விவாதிப்பார். ஏற்கனவே ஒருமுறை அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளதால், மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியாது. நீட் விலக்கு கோரும் மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி விரைவில் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories: