ரதசப்தமியை முன்னிட்டு தென் திருப்பதி கோயிலில் ஸ்ரீ மலையப்ப சுவாமி திருவீதி உலா

மேட்டுப்பாளையம்: ரதசப்தமி முன்னிட்டு நேற்று மேட்டுப்பாளையம் தென் திருப்பதி கோயிலில் ஸ்ரீ மலையப்ப சுவாமி திருவீதி உலா விமர்சையாக நடந்தது. 2 டேஸ் கொரோனா தடுப்பு ஊசி போட்டு கொண்ட பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் புகழ்பெற்ற தென் திருப்பதி மலையப்ப சுவாமி கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ரதசப்தமி முன்னிட்டு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவியுடன் திருவீதி உலா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.

கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் இல்லாமல், திருவீதி உலா நடந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு கொரோனா குறைந்த காரணத்தினால், பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மலையப்ப சுவாமி திருவீதி உலா நேற்று விமர்சையாக நடைபெற்றது. ரதசப்தமி முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாத்துடன் கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி- பூதேவியுடன் புறப்பாடு, சேஷ வாகனம், அன்னப்பட்சி வாகனம், அனுமந்த வாகனம், நிகழ்வுகள் நடந்தது.

மேலும் இன்று மதியம் தங்கரதம், முத்துப்பந்தல் வாகனம், கருட சேவை, சந்திரபிரபை வாகனம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணிக்கு ஏகாந்த சேவை நிகழ்ச்சியுடன், ரதசப்தமி நிறைவடைந்தது. இதில், கலந்து கொண்ட பக்தர்கள் ஆரத்தி தட்டுடன் காத்திருந்து சுவாமிக்கு ஆரத்தி எடுத்தனர்.

Related Stories: