கோவையில் முதன் முதலாக தேர்தல் களத்தில் பஞ்சாப் சிங்: ஆன்லைன் பிரசாரத்தில் நடிகர்கள்

கோவை: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் டோனி சிங். இவரது குடும்பத்தினர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாபிலிருந்து தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்கள். நான்கு தலைமுறைகளாக கோவையில் வசித்து வருகின்றனர். எலக்ட்ரானிக் கடை நடத்துகின்றனர். டோனி சிங் 6 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஜல்லிகட்டு உரிமை மீட்பு போராட்டத்தில் தமிழக இளைஞர்களுடன் போராடி கைதானவர். கோவை மாவட்ட ஜல்லிக்கட்டு குழுவின் பொறுப்பாளராக 4 ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உதவியிருக்கின்றார்.

இந்நிலையில், தற்போது உள்ளாட்சி தேர்தலில் கோவை ஆர்.எஸ்.புரம் 71-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக டோனி சிங் களமிறங்குகிறார். டோனி சிங்கிற்க்கு ஆதரவாக திரைப்பட நடிகர்கள் கே.பாக்கியராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் ஆன்லைனில் வாக்கு சேகரிக்கின்றனர். கோவையில் படித்த நடிகர் பாக்கியராஜ், நிழல்கள் ரவி இருவரும் பள்ளி, கல்லூரி கால நண்பர் டோனி சிங் தேர்தலில் போட்டியிடுவதை அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெயரில் சிங்கும், தலையில் தலைப்பாகையுடன் பஞ்சாபியாக இருந்தாலும், உள்ளத்தால் கோவை பண்பாடு கலாசாரத்தால் ஊறிப்போனவர் நண்பர் டோனி சிங் என நடிகர் பாக்கியராஜ் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.பிறப்பால் பஞ்சாபியாக இருந்தாலும், என் நண்பர் பச்சைத்தமிழன் என நெகிழ்ந்த நிழல்கள் ரவி, டோனி சிங்கிற்கு தேர்தலில் வெற்றிபெற வாழ்த்தினை தெரிவித்துள்ளார். மேலும் பாக்கியராஜூம், நிழல்கள் ரவியும் ஆர்.எஸ்.புரத்தில் வசிக்கின்ற வாக்காளர்கள் வாக்களித்து நண்பரை வெற்றி பெற உதவுமாறு இணையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: