ஐஐடி வளாகத்தில் மான்கள் இறப்பு அதிகரிப்பு டிசம்பரில் மட்டும் 11 மான்கள் உயிரிழப்பு: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அம்பலம்

சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் மான்கள் இறப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி டிசம்பர் மாதத்தில் மட்டும் 11 மான்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை ஐ.ஐ.டி., வளாகம், 617 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு, மான்கள், கலைமான்கள் உட்பட அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இந்த வளாகத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் மற்றும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் வசிக்கின்றனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டு வரை 220 மான்களும், 8 கலைமான்களும் உயிரிழந்துள்ளன. அதை தொடர்ந்து, 2018ம் ஆண்டு 92 மான்கள் இறந்திருக்கின்றன. அதில் 55 மான்கள் நாய் கடித்து இறந்துள்ளதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2019ம் ஆண்டு 38 மான்களும், 2020ம் ஆண்டு 28 மான்களும் இறந்துள்ளன.

இந்நிலையில், கடந்த ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரை 35 மான்கள் உயிரிழந்ததாகவும், கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 11 மான்கள் உயிரிழந்ததாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் 15 மான்களுக்கு மட்டுமே உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 20 மான்களுக்கு உடற்கூராய்வு செய்யப்படாதால் இறப்பின் காரணம் மர்மமாக உள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏற்கனவே சென்னை ஐஐடியில் நாய்கள் இறந்தது சர்ச்சையானது. தற்போது, மான்கள் இறப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.

Related Stories: