சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் பிப்.14ல் வெளியாகிறது

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் முதல் பாடல் வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி வெளியிடப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆனது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரமாண்டமாக தயாரிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இதில் விஜய் ஜோடியாக முதல்முறையாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சர்கார் படத்துக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் என்பதால், இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நயன்தாரா நடிப்பில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படத்தை இயக்கினார். அவர் இயக்கும் மூன்றாவது படம்தான் இது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று நேற்று மாலை வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பீஸ்ட் படத்துக்காக விஜய் ரசிகர்களுக்கு பிடித்தது போல் ஒரு குத்து பாட்டு வேண்டும் என இயக்குனர் நெல்சன் கேட்கிறார். அதற்கு அனிருத், அரபிக் குத்து பாடல் வைக்கலாம் என்கிறார். அது என்ன அரபிக் குத்து என நெல்சன் கேட்கும்போது, அரபிக் இசையில் ஒரு குத்துப் பாடல் என்கிறார் அனிருத்.

அரபி தெரிந்த பாடலாசிரியரை அழைச்சிட்டு வாங்க என்றும் நெல்சனுக்கு சொல்கிறார். வெளியே செல்லும் நெல்சன், சிவகார்த்திகேயனை அழைத்து வருகிறார். அவர் வந்ததும், அரபிக் குத்து பாடல் வேண்டும் என அனிருத் கேட்கிறார். அடுத்த காட்சியில் மூவரும் அரேபியர்கள் ஸ்டைலில் உடை அணிந்து விஜய்யிடம் செல்போனில் பேசுகிறார்கள். அரபிக் குத்து பாட்டு பற்றி சொன்னதும் அது என்ன அரபிக் குத்து பாட்டு என விஜய் கேட்க, நல்லா வந்திருக்கு எங்களை நம்புங்க என அனிருத்தும் நெல்சனும் சொல்கிறார்கள். நம்புற மாதிரியான மூஞ்சிகளா இது என தமாஷாக விஜய் கலாய்க்கிறார். நீங்க பாட்டை எடுத்துக்கிட்டு நாளைக்கு வீட்டுக்கு வாங்க என்றும் விஜய் சொல்கிறார்.

அத்துடன் இந்த அரபிக் குத்து பாடலின் முதல் வரியான ‘ஹலமதி ஹபீபோ’ என்ற பாடல் ஒலிக்கிறது. முழு பாடலும் பிப்ரவரி 14ல் வெளியாகும் என்றபடி வீடியோ முடிகிறது. இந்த கலக்கலான வீடியோவில் தோன்றும் நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் என மூவரும் ஜாலியாக ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வதும் இந்த பாட்டுக்கான டிஸ்கஷன் நடப்பதும் என குதூகலமான வீடியோவாக இது உருவாகியுள்ளது. இந்த வீடியோ, ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. அரபிக் குத்து பாட்டு என்ற ஹேஷ்டேக்கும் வைரலானது. இந்த வீடியோவையும் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பரப்பினர். இதையடுத்து இந்த வீடியோ டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.

Related Stories: