கர்நாடகாவை தொடர்ந்து புதுவையிலும் சர்ச்சை முஸ்லிம் மாணவி பர்தா அணிந்து வர ஆசிரியை தடை: பள்ளியை முற்றுகையிட்டதால் அனுமதி

புதுச்சேரி: புதுவை மாநிலம், அரியாங்குப்பத்தில் உள்ள அரசு பள்ளிக்கு முஸ்லிம் மாணவி ஒருவர் பர்தா அணிந்து சென்றுள்ளார். அங்கிருந்த ஆசிரியை அந்த மாணவியை அழைத்து  பர்தா அணிந்து வரக்கூடாது எனக்கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் ஆசிரியையை சந்தித்து முறையிட்டனர். அப்போது பள்ளிகளில் மாணவர்களுக்குள் இடையே எந்த வேற்றுமையும் இருக்கக் கூடாது என்பதற்காக பர்தா அணிந்து வரவேண்டாமென கூறியதாக விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் மாணவர் கூட்டமைப்பிடம் முறையிட்டனர். நிறுவனர் சாமிநாதன், திமுக மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் மாணவர் அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் நேற்று  அரியாங்குப்பம் 4 முனை சந்திப்பில் இருந்து பேரணியாக சென்று அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் 3ம் வட்ட கல்வித்துறை முதன்மை அதிகாரி மீனாட்சி சுந்தரம், பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கோமதி ஆகியோரை மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். இதில் மாணவி பர்தா அணிந்து பள்ளிக்கு வர அனுமதியளிக்கப்பட்டது. அதிகாரி தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: