20 ஆண்டுகளுக்கு பிறகு விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. 20 வருடத்திற்கு இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைமுன்னிட்டு கடந்த 3ம் தேதி இரவு தருமபுரம் 27வது ஆதீனம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முதல் கால யாக பூஜையை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரண்டாம் கால பூஜைகள் பூர்ணாஹூதி, தீபாராதனை, மாலை 6 மணிக்குமேல் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பிரமாண்ட யாகசாலையில் மூன்றாம் கால பூஜைகள், தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை நான்காம் கால பூஜை மற்றும் மாலை ஐந்தாம் கால பூஜைகள் நடைபெற்று முடிந்து, இன்று காலை ஆறாம் கால பூஜை தொடங்கி காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயில் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: