சென்னை மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்: தர்மம் செத்துவிட்டதாக ஓபிஎஸ்சுக்கு கடிதம்

சென்னை: மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிமுக முன்னாள் கவுன்சிலர் அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சியின் 195வது வட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.பாஸ்கரன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: நான் 1998ம் ஆண்டில் இருந்து ஜெயலலிதா தலைமையை ஏற்று 25 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக கட்சியில் பணியாற்றி வருகிறேன்.

2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின்போது ஒக்கியம் துரைப்பாக்கம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றேன். 2011ம் ஆண்டு சென்னை மாநகராட்சியானபோது மறைந்த ஜெயலலிதா மாநகராட்சி தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கினார். வெற்றி பெற்றேன்.சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினராகவும், பகுதி செயலாளராகவும் இருந்த கே.பி.கந்தன் எனது வார்டுக்கு எந்தவித உதவியும் செய்தது கிடையாது. மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது கூட வந்து பார்க்கவில்லை. கே.பி.கந்தனுக்கு முன்பே நான் அதிமுகவில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன்.

ஆனால் கந்தன் என்னை அரசியலில் இருந்தே ஓரங்கட்ட வேண்டும் என்ற நீண்ட நாளைய கனவை இப்போது நிறைவேற்றி விட்டார். எனக்கு தற்போது போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ‘தர்மத்தின் வாழ்வு தன்னை சூதுகவ்வும் தர்மமே மீண்டும் வெல்லும்’ என்று ஜெயலலிதா சோதனை வரும்பொழுதெல்லாம் கூறுவார். ஆனால் இன்று தர்மம் செத்து விட்டது. எனவே நான் சுயமரியாதையோடு எனது 195வது வட்ட அதிமுக செயலாளர் பதவியை கனத்த இதயத்தோடு ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். இவருடன் மேலும் பல அதிமுகவினர் ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related Stories: