நீட் தொடர்பாக ஆளுநர் கருத்து சரியல்ல தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தல்

சென்னை: நீட்விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத், மாநிலச் செயலாளர் மருத்துவர் ஏ.ஆர்.சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக ஆளுநர் தமிழக சட்டமன்றத்தையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் இழிவு படுத்தியுள்ளார். எனவே மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படும் ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.  

மேலும் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு நீட் உதவியுள்ளது என்று ஆளுநர் தரப்பில் கூறப்படுவது சரியல்ல. நீட் மட்டுமல்ல, எந்த ஒரு போட்டித் தேர்வும் இன்றைய நிலையில் வசதி படைத்த நகர்புற மாணவர்களுக்கு சாதகமாகவே உள்ளது. இந்த உண்மையை கருத்தில் கொள்ள ஆளுநர் தவறியது வருத்தமளிக்கிறது. நீட் ஏழை எளிய மாணவர்களிடம் இருந்து பொருளாதார சுரண்டலை தடுக்கிறது என உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி ஆளுநர் கூறுவதும் சரியல்ல. நீட் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை ஏராளமான முறைகேடுகள் நடைபெறுகிறது. நீட் விலக்கு மசோதா குறித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சட்டப் பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்டியிருப்பது வரவேற்புக்குரியது. இவ்வாறு டாக்டர் ரவீந்திரநாத் கூறினார்.

Related Stories: