திமுக நிர்வாகி கொலையில் 7 பேர் கும்பல் சிக்கியது: முக்கிய புள்ளிக்கு வலை

நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, தெற்கு பஜார், உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுதாஸ் என்ற அபேமணி (38).  35வது வட்ட திமுக செயலாளரான அபேமணி நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகே 7 பேர் கொண்ட கும்பலால் சராமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 6 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 35வது வார்டில் அபேமணி, தனது தாயாரை நிறுத்த இருந்ததாகவும், அவருக்கு கட்சியில் இருந்த செல்வாக்கால் அந்த வார்டில் அவர் கூறும் வேட்பாளருக்கே போட்டியிட வாய்ப்பு கிடைக்க இருந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்து காழ்ப்புணர்ச்சியோடு, கூலிப்படையை அமர்த்தி அபேமணியை கொலை செய்திருப்பது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படையினர் நேற்று இரவு பகலாக நடத்திய தேடுதல் வேட்டையில் கூலிப்படையைச் சேர்ந்த 7 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு கார் மற்றும் அரிவாள், வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களை பல லட்சம் கொடுத்து பாளையங்கோட்டையைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஏவி விட்டதாகக் கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அவரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சிக்கிய 7 பேரிடம் நடத்திய விசாரணையில், சமீப காலமாக கொடை விழா, திருவிழாக்கள் ஆகியவற்றில் அபேமணிக்கே முதல் மரியாதை கிடைத்து வந்ததால், அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றவர்களுக்கு அவர் மீது காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்தது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: