ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட கோயில் நிலம் கட்டிடங்கள் எவ்வளவு? அறிக்கை கேட்கிறது அறநிலையத்துறை

சென்னை: தனி நபர் பெயரில் இருந்த பட்டா மாற்றம் செய்து, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட கோயில் நிலங்கள், கட்டிடங்கள் எவ்வளவு என்ற விவரத்தை அறிக்கையாக அனுப்ப ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுரபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அறநிறுவனங்களுக்குச் சொந்தமான அசையாச் சொத்துக்கள் மீட்கப்பட்ட விவரத்திற்கும்,  நிலவுடமை மேம்பாட்டுத் திட்ட தவறுகள் தொடர்பாக மற்றும் கணினி சிட்டா தயாரிப்பின்போது தனி நபர் பெயரில் மாற்றம் செய்யப்பட்ட அசையாச் சொத்துக்கள் குறித்து அறநிறுவனங்கள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் பெறப்பட்ட உத்தரவு மூலம் மீட்கப்பட்ட நிலவிவரங்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், இம்மூன்று விவகாரம் தொடர்பாக, உதவி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் தனி வட்டாட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அறநிறுவனங்களுக்குச் சொந்தமான இவ்விவரங்களை பெற்று தொகுத்து பிரதி வாரம் திங்கட்கிழமை அன்று ஆணையர் அலுவலகத்திற்கு தகவல்களை அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதில், கோயில் பெயர், நிலம், கட்டிடம், குளம், அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களின் எண்ணிக்கை, மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு தொகை, மீடகப்பட்ட தேதி  ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். மீட்கப்பட்ட சொத்தின் மதிப்பை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். புல எண் விவரம் கண்டிப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: