இந்தியாவில் சகிப்பின்மை அதிகரிப்பு என கருத்து நடிகை ஸ்வரா பாஸ்கர் தேச துரோகி சினிமா தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

மும்பை: இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகை ஸ்வரா பாஸ்கர் ஒரு தேச துரோகி என்று சினிமா தயாரிப்பாளர் அசோக் பண்டிட் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்தியா - அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, ‘இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில், திரைப்பட தயாரிப்பாளர் அசோக் பண்டிட் அளித்த பேட்டியில், ‘அமெரிக்க முஸ்லிம் கவுன்சிலின் சர்வதேச மேடையில் பேசும்போது, ​​முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி பேசியது மத நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் நடிகை ஸ்வரா பாஸ்கரும் கலந்துகொண்டார்.

ஏற்கனவே இவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘புதிய இந்தியாவில் இருக்க நான் பயப்படுகிறேன். இங்கு நான் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை’ என்று பதிவிட்டார். இவ்வாறாக இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஹமீது அன்சாரி, ஸ்வரா பாஸ்கர் ஆகிய இரு வரும் தேச துரோகிகள். தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக இருவர் மீதும் வழக்கு பதிய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். ‘பாஜ ஆளும் மாநிலங்களில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். மத துவேஷ கருத்துகளை பேசி வருகின்றனர். இதை எதிர்த்து பேசினால் தேச துரோகிகள் என குற்றம்சாட்டுவது வாடிக்கையாகி விட்டது’ என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Related Stories: