வால்பாறையில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி அறையில் சிக்கி யானைக்குட்டி பலி

வால்பாறை: உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியாக உள்ள பள்ளியை ஆய்வு செய்த  அலுவலர்கள் சத்துணவு கூடத்தில் துர்நாற்றம் வீசியதால் யானைக்குட்டி இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். வால்பாறை அடுத்துள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் கீழ்பிரிவு. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியாக இருந்த கட்டிடம் வனவிலங்குகள் நடமாட்டம் காரணமாக, 2018ல் மாணவர்களுக்கு பாதுகாப்பற்றது என கல்வித்துறையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் வால்பாறையில் கடந்த அக்டோபர் முதல் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்தது. யானைகள் கூட்டத்தில் இருந்து 6 வயது ஆண் குட்டி யானை சத்துணவு கூடத்தில் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளது.

பின்னர் வைப்பு அறை கதவையும் உடைத்து  உள்ளே சென்றுள்ளது. அப்போது கதவு எதிர்பாராதவிதமாக கதவு மூடிக்கொண்டது. யானைக்குட்டியால் வெளியே வரமுடியவில்லை. தனது சிறிய தந்தத்தால் கதவு மற்றும் சுவரை குத்தி திறக்க முயற்சித்த தடங்கள் தென்படுகிறது.  சத்துணவு கூடத்தில் சிக்கிய யானைக்குட்டியை காப்பாற்ற யானை கூட்டம் போராடியது. யானை கூட்டம் சுவரில் ஓட்டை போட்டு குட்டியை மீட்க முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் அவையும் தோல்வியில் முடிந்தது.

இதனால் ஏமாற்றத்துடன் அவைகள் சென்றுவிட்டன. கைவிடப்பட்ட கட்டிடம் என்பதால் மக்கள் அப்பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடியாக அப்பள்ளி உள்ளதால், ஆய்வு செய்த அலுவலர்கள் சத்துணவு கூடத்தில் துர்நாற்றம் வீசியதால் குட்டி யானை இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். வனத்துறை டாக்டர் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டார்.  கைவிடப்பட்ட பள்ளி கட்டிடத்தில் யானைக்குட்டி சிக்கி பலியான சம்பவம் வனத்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: