400 ஏக்கர் பாசன பயனடையும் வகையில் 40 ஆண்டாக நிரம்பாத ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?உடனே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

கே.வி.குப்பம் : 400 ஏக்கர் பாசன பயனடையும் வகையில், 40 ஆண்டாக நிரம்பாத ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்டது ஒளி ஏரி. 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு சுமார் 400 ஏக்கர் பாசன வசதி பெறும். இந்நிலையில் இந்த ஏரிக்கு சின்னவடுகன்தாங்கல் மலை பகுதியில் இருந்து வரும் ஜவுக்கு நீரும், வடுகன்தாங்கல் ஆண்டாள் ஏரியில் இருந்து நிரிம்பி வரும் உபரி நீரும் சேர்ந்து  கானாற்று கால்வாய் வழியாக ஏரிக்கு நீர் வரத்து கால்வாயாக செல்லும்.

அவ்வாறு செல்லும் கால்வாயானது, சுமார் 5 அடி அகலமும், ஒரு கிலோமீட்டர் நீளமும் கொண்டுள்ளவையாகும்.  இந்த நீர் வரத்து கால்வாய் ஆண்டாள் ஏரியிலிருந்து வடுகன்தாங்கல் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் வழியாகவும், வடுகன்தாங்கல் ஆண்டாள் ஏரியிலிருந்து வடுகன்தாங்கல் கெங்கையம்மன் கோவில் எதிரே உள்ள ஓடை கால்வாய் வழியாகவும், பில்லாந்திப்பட்டு ஊராட்சி சோலையூர் வழியாகவும், வேப்பங்கனேரி ஏரியின் உபரி கால்வாய் வழியாகவும் என மேற்கண்ட மூன்று  நீர் வரத்து கால்வாய்களையும்  சமூக விரோதிகள் சிலர் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு மட்டுமின்றி ஏரி புதர் மண்டியும் குடிமராமத்து பணி மேற்கொள்ளாமலும் இருப்பதாலும்,  சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக ஏரி நிரம்பியவில்லையாம்.  கடந்த ஆண்டு பெய்த கன மழையால் ஊரே வெள்ள காடாய் இருந்தும் இந்த  ஏரி நிரம்பவில்லை. இதனால்  மேற்கண்ட நீர்வரத்து கால்வாய்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: