உள்துறை டிஎஸ்பி என கூறி திருத்தணி எம்.எல்.ஏவிடம் பணம் பறிக்க முயன்ற கணவன், மனைவி கைது

சென்னை: உள்துறை டிஎஸ்பி என கூறி திருத்தணி எம்.எல்.ஏவை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற கணவன், மனைவியை திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர் நேற்று அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். திருத்தணி எம்எல்ஏசந்திரன். இவரது செல்போனுக்கு கடந்த 25ம் தேதி தொடர்பு கொண்ட ஒரு நபர், தான் தலைமை செயலகத்தில் (உள்துறை) டிஎஸ்பியாக பணிபுரிவதாகவும், திருத்தணி சட்டமன்ற தொகுதி சம்மந்தமாக ஒரு புகார் வந்துள்ளதாகவும், அந்த புகாரினை தன்னால் சரிசெய்ய முடியும் என்றும், அதற்கு ரூபாய் 25 லட்சம் பணம் செலவாகும் எனவும் கூறியுள்ளார்.

தொகுதி சார்ந்த பிரச்சனை என்னவென்று எம்எல்ஏ சந்திரன் கேட்டபோது, அந்த நபர் அது பெரிய பிரச்சனை. தேவையில்லாமல் அதிகம் கேள்விகள் கேட்டு நீங்களே சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள் என மிரட்டியுள்ளார். இதேபோன்று விளாத்திகுளம் எம்.எல்.ஏவிற்கும் பிரச்னை ஏற்பட்டது. நான் தான் அவருக்கு சரிசெய்து கொடுத்தேன். அவரும் 25 லட்சம் ரூபாய் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தன்னை மிரட்டி பணம் பறிக்க யாரோ திட்டமிடுகிறார்கள் என்று கருதிய எண்எல்ஏ சந்திரன், இது குறித்து திருவள்ளூர் எஸ்பி வருண்குமாரிடம் புகார் செய்தார்.  இந்த மிரட்டல் ஆசாமிகளைப் பிடிக்க எஸ்பி வருண்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

பின்னர், எம்.எல்.ஏ சந்திரன் உதவியாளர் மூலம் மிரட்டல் ஆசாமியிடம் போலீசார் பேசினர். அப்போது, பயந்ததுபோல நடித்த உதவியாளர், பணம் தருவதாக ஆசாமியிடம் தெரிவித்தார். இதனால், 500 ரூபாய் கட்டுபோல வெற்று பேப்பர் தயார் செய்யப்பட்டது. மேல் பகுதியில் மட்டும் ₹500 நோட்டு வைக்கப்பட்டது. அதை சூட்கேசில் வைத்து ஆசாமியிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர், பணம் தயார் என்று ஆசாமியிடம் கூறியவுடன், திருத்தணியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே வந்து பணம் பெற்றுக் கொள்ள வருவதாக தெரிவித்தார். இதனால், அங்கு எஸ்பி வருண்குமார் தலைமையில் தனிப்படையினர் சாதாரண உடையில் மறைந்திருந்தனர். அப்போது, மிரட்டல் ஆசாமி, ஒரு பெண்ணுடன் பணத்தை வாங்க வந்தார். அவரிடம் பணம் போன்ற நோட்டு கட்டுகள் உள்ள சூட்கேசை சந்திரனின் உதவியாளர் கொடுத்தார். மிரட்டல் ஆசாமி சூட்கேசை வாங்கி திறந்து பார்த்தார். அதில் பணம் கட்டு கட்டாக இருந்ததைப் பார்த்து, இனி பிரச்னை இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று புறப்பட்டார். கட்டுக்குள் வெறும் காகிதம் இருந்ததை கூட கவனிக்காமல் அவசர அவசரமாக இருவரும் புறப்பட்டனர். அப்போது மறைந்திருந்த தனிப்படை போலீசார் ஆசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருடன் இருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த ஆசாமி, அம்பத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (43) என்றும், அவருடன் வந்தது அவரது மனைவி யசோதா (43) என்றும் தெரியவந்தது. இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து விஜயகுமார் டிஎஸ்பி என்ற போலியான அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், இரண்டு செல்போன்கள், கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் மற்றும் ரூபாய் 10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருத்தணி எம்.எல்.ஏவை ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற சம்வவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாள அட்டை தயார் செய்து வைத்திருப்பதால், கண்டிப்பாக இந்த முறை மட்டுமே மிரட்டலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். மேலும் பலரையும் மிரட்டி பணம் பறித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: